Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் இரவு 9 மணி வரை செயல்படும்: இரவு 8 மணி வரை டோக்கன் விநியோகம் செய்ய உத்தரவு

சென்னை

தமிழகத்தில் மதுபானக் கடைகள் இன்று முதல் இரவு 9 மணிவரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு 8 மணி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகின்றன.

இச்சூழலில், இன்று முதல்இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மோகன்,அனைத்து மண்டல, மாவட்டமேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய அரசாணைப்படி, டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.

முழு நேர ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட வேண்டும்.

மது வகைகளை வாங்குவதற்காக, இரவு 8 மணி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும்.

எந்த இணை நோயும் இல்லாமல் முழு உடல் நலத்துடன் உள்ள,55 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

சமூக இடைவெளி அவசியம்

மேலும், கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக் கூடாது. இரு வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. கடை பணியாளர்கள் முகக் கவசம், கையுறைகள் அணிந்திருப்பதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

தினமும் இரு முறை கிருமிநாசினி திரவத்தைக் கொண்டு கடையை சுத்தம் செய்வதுடன், கடையைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

குறைந்தது 2 பணியாளர்கள் கடையின் வெளிப்புறம் நின்று, மது அருந்துவோர் சமூகஇடைவெளியைப் பின்பற்றுவதையும், முகக் கவசம் அணிந்துள்ளதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

முகக் கவசம் கட்டாயம்

முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த, டோக்கன் முறையைப் பின்பற்ற வேண்டும். கடை முன்பு அதிக எண்ணிக்கையில் மது அருந்துவோர் கூடுவதைத் தவிர்க்க, நேரத்தைக் குறிப்பிட்டு டோக்கன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x