

தொழிலதிபரை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பலை சினிமா பாணியில் தாராபுரம் போலீஸார் மடக்கிப் பிடித்து, பின்தொடர்ந்து வந்த விழுப்புரம் போலீஸார் வசம் ஒப்படைத்தனர். சொகுசு கார் மற்றும் கைத் துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு, நேற்று காலை வெள்ளகோவில் போலீஸாரிடமிருந்து ஒரு தகவல் அளிக்கப்பட்டது. அதில், கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் சொகுசு காரில் மர்ம கும்பல் இருப்பதாகவும், தாராபுரம் பகுதியை கடந்து செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் முனியப்பன் தலைமையிலான நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், தாராபுரம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர்.
சென்னை திருநின்றவூரை அடுத்த நாச்சியார்புரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த கரட்டிபாளையத்தைச் சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க பெண்ணும், அவரது 8 வயது மகனும் உடன் சென்றுள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார், வாகனத்தை சோதனையிட்டதில் கைத் துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காரை ஓட்டி வந்த கார்த்திகேயனும், உடன் வந்த பெண்ணின் கணவர் செந்தில்குமாரும் கூட்டாளிகளாக இருந்து, விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபரை சொகுசு காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் மனைவியையும், மகனையும் அதே காரில் வெள்ளகோவிலுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு, கார்த்திகேயனுடன் அனுப்பிவைத்துள்ளார் செந்தில்குமார்.
இதற்கிடையே விழுப்புரம் போலீஸார் அளித்த தகவலின்பேரில், கடத்தல் கும்பலை கையும் களவுமாக பிடிக்க வெள்ளகோவில் போலீஸார் ஒருபுறம், தாராபுரம் போலீஸார் மறுபுறம், பின்தொடர்ந்து வந்த விழுப்புரம் போலீஸார் ஒருபுறம் சேர்ந்து சினிமா பாணியில் காரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட மூவர், கைப்பற்றப்பட்ட கார், கைத் துப்பாக்கி ஆகியவற்றை விழுப்புரம் போலீஸார் வசம் தாராபுரம் போலீஸார் ஒப்படைத்தனர்.
மேற்கொண்டு இந்த வழக்கில் கடத்தப்பட்டது யார்? எதற்காக கடத்தினார்கள்? கடத்தப்பட்டவரின் நிலை என்ன? செந்தில்குமார் எங்கு உள்ளார்? அவருடன் இன்னும் யார் யார் கடத்தல் சம்பவத்தில் உள்ளார்கள் என்ற எந்த விவரமும் தெரியாது.
இவ்வாறு போலீஸார் கூறினர்.