கரோனா தொற்று பேரிடர் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக புகார்

கரோனா தொற்று பேரிடர் நேரத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக புகார்
Updated on
1 min read

திருப்பூரில் கரோனா தொற்று பேரிடர் நேரத்தில் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நியாயவிலைக் கடைகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர், வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரிடம் நல்லூர் நுகர்வோர் நல மன்றம் தலைவர் என்.சண்முகசுந்தரம் நேற்று அளித்த மனுவில், "திருப்பூர் வடக்கு பகுதியில் 168 நியாயவிலைக் கடைகளும், தெற்கு பகுதியில் 144 கடைகளும் செயல்படுகின்றன. தெற்கு பகுதியில் ஒரு கடைக்கு அரிசி அட்டைதாரர்கள் 1500-க்கு குறையாமல் உள்ளனர். இதில் ஒரு நபர் அட்டைதாரர்களுக்கு 8 கிலோ அரிசியும், 2 பேர் உள்ள அட்டைகளுக்கு 12 கிலோ அரிசியும், 3 அல்லது 4 பேர் உள்ள அட்டைகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.

திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு பகுதிகளில் சேர்ந்து 4,17,000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த 3 மாதங்களாக வழங்கப்படும் அரிசி மிகவும் மட்டமாகவும், தரமில்லாமலும், சமைக்க முடியாத நிலையிலும் உள்ளது. இதனால், குப்பைத் தொட்டியில் கொட்டுவதுடன், மாடுகளுக்கு தீவனமாகவும் வைக்கப்படுகிறது. அரிசி வாங்கவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதனால் நியாயவிலைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள அரிசியை எலி, பெருச்சாளிகள் தின்று வீணடிக்கின்றன.

இதுதொடர்பாக நியாயவிலைக் கடைக்காரர்களிடம் கேள்வி எழுப்பினால், ‘வரும் அரிசியைதான் வழங்குகிறோம்’ என்கின்றனர். ஏற்கெனவே கரோனா கட்டுப்பாடுகளால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நியாயவிலைக் கடைகளில் உணவு விநியோகத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. குறிப்பாக, பேரிடர் நேரத்தில் செய்ய வேண்டியது மிகவும் அத்தியாவசியம்.

எனவே, நியாயவிலைக் கடைகளில் ஆட்சியர் ஆய்வு செய்து, குடும்ப அட்டைகளுக்கு தரமான அரிசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in