Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

ஓசூர், தளி பகுதியில் தக்காளி விலை சரிவு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கெலமங்கலம் அருகே சந்தையில் பெட்டிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள தக்காளி.

ஓசூர்

ஓசூர், தளி ஆகிய பகுதிகளில் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதால் மொத்த விலையில் ரூ.1-க்கும் சில்லரை விலையில் ரூ.5-க்கும் தக்காளி விற்கப்படுகிறது. இதனால் பயிரிட்ட செலவு கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் தரமான தக்காளிகளை சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதால் தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டு மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.10 என்று விற்பனை செய்து, ரூ.2 லட்சம் முதல் ரூ3 லட்சம் வரை லாபம் ஈட்டி வந்த விவசாயிகளுக்கு தற்போது தக்காளியின் விலை, மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.1 முதல் ரூ.2 வரை விற்பனை விலை சரிவடைந்துள்ளதால், உரம் செலவு, பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாகன செலவு உள்ளிட்ட பயிரிட்ட செலவு கூட கிடைக்காமல் நன்கு விளைந்துள்ள தக்காளிகளை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுவிடும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கெலமங்கலம் ஒன்றியம் ஜக்கேரி கிராமத்தில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி ராமப்பா கூறுகையில், இந்தாண்டு நல்ல விளைச்சல் இருந்தும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. வெளியூர்களுக்கும் அனுப்பி வந்தோம். தற்போது விளைச்சல் அதிகரித்து தக்காளி தேக்கமடைந்து விலை குறைந்து விட்டது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளியை ரூ.1-க்கு கூட வாங்க ஆளில்லை.

இதனால் இப்பகுதியில் தக்காளி பயிரிட செலவு செய்த விவசாயிகளுக்கு வாங்கிய கடனைக் கூட கொடுக்க முடியாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x