

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மதுவிலக்கு போலீஸார் நடத்திய சோதனையில் 3,150 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு போலீஸார், 3 ஆய்வாளர்கள் தலைமையில் 15 காவலர்கள் நேற்று முன்தினம் கல்வராயன்மலையில் உள்ள மலையரசம்பட்டு அடுத்த பொரசப்பட்டு ஓடையில் சோதனை நடத்தினர். அப்போது 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 ஊறல்களில் 3,000 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தவிர 150 லிட்டர் சாராய ஊறலும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அங்கேயே போலீஸார் அழித்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் கூறுகையில்," இதுவரை கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றச்செயலில் ஈடுபட்டதாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 148 லிட்டர் கள்ளச்சாராயமும், கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்த 66 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி எவராவது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தாலோ குண்டர் தடுப்புக்காவலில் கைது செய்யப்படுவார் கள்" எனத் தெரிவித்தார்.