

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் பண்ருட்டியில் இந்த ஆண்டும் பலா விற்பனை மீண்டும் தொய் வடைந்துள்ளது.
பலா பழத்திற்கு பெயர் பெற்றதுபண்ருட்டி. இங்கு மணற்பாங்கான செம்மண் பூமியில் விளையும் பலாவுக்கு தனிச் சுவை உண்டு. ஊட்டச்சத்து மிக்க மருத்துவ குணமுடைய பலாவுக்கு எப்போதும் கிராக்கி உண்டு். ஒவ்வொரும் ஆண்டும் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பலாபழ அறுவடை தொடங்கி விற்பனைக்கு வந்துவிடும். கோடை காலத்தில் முக்கனிகளும் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும்.
கடந்த ஆண்டு பரவிய கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பலா அறுவடை தடைபட்டது. மரத்தில் வீணாகிய பழங்களையும் யாரும்வாங்க முன்வரவில்லை. இதனால்கடந்த ஆண்டு பலா விவசாயி களும், விற்பனையாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கரோனா தாக்கம் இருந்தாலும், கட்டுப்பாடுகள் பெரிய அளவில் இல்லாததால், இந்த ஆண்டு விற்பனை செய்துவிடலாம் என நம்பியிருந்த விவசாயிகளும் மீண்டும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழுஊரடங்கு போன்ற அறிவிப்புகளால் தங்கள் வியாபாரம் பாதிக்குமோ என பலா வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பேசிய பலாபழ மண்டி வியாபாரியான பிள்ளையார்குப்பம் சுரேஷ் கூறுகையில், "ஒரு பலாப்பழம் அதன் தரத்துக்கு ஏற்ப ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்ருட்டியில் 3 கி.மீட்டர் சுற்றளவில் பல்வேறு அளவிலான நூற்றுக்கும் மேற்பட்ட பலா மண்டிகள் உள்ளன. வரும் நாட்களில் அரசின் கட்டுப்பாடுகளால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும். இந்த ஆண்டு விற்பனையை நம்பி தான் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் உள்ளிட்ட செலவுகள் இருக்கின்றன" என்றார்.