Published : 28 Dec 2015 10:33 AM
Last Updated : 28 Dec 2015 10:33 AM

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!- ‘புதிய தலைமுறை’ சத்யநாராயணன் நேர்காணல்

‘‘சமூகச் சீர்கேடுகள், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வே இல்லாத அப்பாவி மக்கள், சமூக அக்கறையோ தொலைநோக்குப் பார்வையோ சற்றும் இல்லாமல் சுயநலத்தோடு செயல்படும் அதிகார வர்க்கம்.. இவையெல்லாம்தான் நான் ஊடகத்துறைக்கு வருவதற்கான முக்கிய காரணங்கள்’’ என்கிறார் சத்யநாராயணன்.

சமூகப் பொறுப்புணர்வோடு, உண்மைச் செய்திகளை உடனுக்கு டன் மக்களுக்கு தந்துகொண்டிருக்கும் ‘புதிய தலைமுறை’ குழு மத்தின் தலைவர். ‘நம்மால் முடியும்’ திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி, தமிழக சுற்றுப்புற சூழலில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை முன்னெடுப்பவர்களில் முக்கியமானவர்.

மாற்றங்களை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட, நாமே அதை கொண்டுவரும் முயற்சியை முன்னெடுத்தால் என்ன என்று தோன்றியது. எதற்கும் அஞ்சாமல் நல்லதின் பக்கம் நிற்க வேண்டும் என்ற உறுதி மனதில் ஏற்பட்டதன் விளைவாகவே ‘புதிய தலைமுறை’ உருவானது.

பத்திரிகை, தொலைக்காட்சி என ஊடகங்கள் மற்றும் ‘புதிய தலைமுறை’ அறக்கட்டளை மூலம் இளைய தலைமுறைக்கு சமூக அக்கறையை ஏற்படுத்த முனைப்போடு செயல்படத் தொடங்கினோம். பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். புதிய தலைமுறை யின் ‘நம்மால் முடியும்’ குழு வினர், தமிழகத்தின் பல் வேறு பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலை களையும் அவற்றின் நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வாரியுள் ளனர். இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் இணைத் துக்கொண்டு செயல்படவேண்டும் என்ற அதே நோக்கத்தோடு சூர்யா வின் அகரம் ஃபவுண்டேஷன் என்னை அணுகியது. இதில் ‘தி இந்து’ குழுமமும் கைகோத் திருப்பதை அறிந்தபோது எனக்கு மேலும் சக்தி கிடைத்ததைப் போல உணர்ந்தேன். ‘யாதும் ஊரே’ திட்டத்தின் பிரதான நோக்கம், ஒரே திசையில் பயணிக்கும் அனைவரையும் ஒன்றிணைப்பதே.

அதன் முதல்படியாக, முதலில் இளைஞர்களை ஒன்றிணைக் கிறோம். மழை நிவாரணப் பணி களில் ஈடுபட்ட இளைய தலைமுறை யைச் சேர்ந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையின் கீற்றுகள். அடர்ந்த இருளின் முகத்திரையை கிழித்து பிரகாசிக்கும் தீச்சுடர்கள். ‘என் கண் முன்னால் மக்கள் துயரப்படும்போது, என்னால் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்க முடியாது’ என்று களத் தில் இறங்கிப் பணியாற்றிய அனைவரும் மனிதநேயத்தின் தூதுவர்கள். அவர்கள் தனித்தனி யாக இருக்கும்போது முழுமை யான மாற்றத்தை உருவாக்க முடியாது.

மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்து போகிற சாக்கடை நீர் வீட்டுக்குள் வந்ததும், உணவு இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தவர்கள் பலர். ஆனால், தினமும் சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் சக மனிதர்களைப் பற்றி சலனமில்லாமல் அவர்களை கடந்துதான் போகிறோம். புழுதி பறக்கும் சாலைகளில் கார் கண்ணாடியை ஏற்றிக்கொண்டும், துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டும் கடந்து போகிற நாம், ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்துக்கு மேலாக அதே தூசியில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காவலரைப் பற்றி கவலைப்படுவதில்லை.

அளவுக்கு அதிகமான அதே மாசு படிந்த காற்றுதான் நம் குழந்தைகளின் நுரையீரலை நிமிடத்துக்கு நிமிடம் தொட்டுத் திரும்புகிறது. நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, நல்ல வசதிகள், நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று தினமும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். எல்லாம் கிடைத்தும் என்ன பயன்? அவர்கள் சுவாசிக்கும் காற்று நல்லதாக இல்லை. அவர் கள் அருந்தும் நீர் தூய்மையான தாக இல்லை. அவர்கள் வாழும் சுற்றுப்புறச்சூழல் ஆரோக்கிய மானதாக இல்லை. இது கண்ணை விற்று சித்திரம் வாங்கும் அவலம் அல்லவா? இயற்கையின் மீது அக்கறை செலுத்தாமல் போவதன் மூலம் இழப்பு நமக்குதான்.

சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் சூர்யாவை ஒரு நிகழ்வில் சந்தித்தேன். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் வாழ்வில் அவர் செய்த மாற்றங்களை அறிந்து வாழ்த்து சொன்னேன். ‘நாம எல்லாரும் சேர்ந்து ஒண்ணா செயல்பட்டா நல்லா இருக் கும்’ என்று அவர் சொன்ன போது, ‘நிச்சயமாக இணைந்து செயல்படுவோம்’ என்று சொன்னேன். எங்கள் விருப்பத்தை மழை நிறைவேற்றி தந்திருக்கிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்து மக்களின் மனசாட்சியாக, ஊடகத் துறையில் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும் ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து ‘யாதும் ஊரே’ திட் டத்தை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி.

தடைகள் அனைத்தையும் ஒற்றுமை கொண்டே உடைப்போம். மாற்றத்துக்கான விதைகளை ஒற்றுமை கொண்டே விதைப்போம். யாவும் சாத்தியமே என்கிறார் சத்யநாராயணன்.

(இணைவோம்.. இணைப்போம்..)

சென்னையின் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவரா நீங்கள்? வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெறலாம். உங்கள் விருப்பத்தை ‘yadhum.in' என்ற இணையத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 90256 01332, 73586 86695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x