Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

கோவிஷீல்டு இல்லை; கோவேக்சின் பற்றாக்குறை: மதுரை, விருதுநகரில் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் ‘கோவி ஷீல்டு’ தடுப்பூசி இல்லாததால் நேற்று இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

‘கோவேக்சின்’ தடுப்பூசியும் பற்றாக்குறையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. அரசின் விழிப்புணர்வால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 2 நாட்களாக மதுரை மாவட்டத்திலும் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கிவிட்டது. நேற்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘கோவிஷீல்டு’ இருப்பு இல்லை.

இந்த தடுப்பூசியை முதற்கட்டமாக போட்டுக் கொண்டவர்கள், 40 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று போட வந்தனர். ஆனால், அவர்களை சில நாட்கள் கழித்து வரும்படி அனுப்பினர். அதுபோல், ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் பற்றாக்குறையாக உள்ளதால், ஏற்கெனவே போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசியை போட்டு வருகின்றனர். இதனால் ஆர்வத்துடன் புதிதாக ஊசி போட வருவோர் தடுப்பூசி இன்றி ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து மதுரையில் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலர் மணி கண்டன் கூறியதாவது: கரோனா தடுப்பூசி போட கடந்த ஒரு மாதமாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தேன். மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வந்தனர். ஆனால், நேற்றுமுதல் அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டுமின்றி, அனைத்து சுகாதார மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி இருப்பு இல்லை.

முதல் தடுப்பூசிக்கும், 2-வது தடுப்பூசிக்கும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இடைவெளி விட வேண்டும். தாமதமானால் 2-வது ஊசி போட்டும் பலன் இருக்குமா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கோவிஷீல்டு தற்போது இருப்பு இல்லை. ஆனால், கோவேக்சின் பற்றாக் குறை இல்லை. சில நாட்கள் தள்ளி 2-வது தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பிரச்சினை இல்லை. ஓரிரு நாட்களில் கோவிஷீல்டும் வந்துவிடும்,’’ என்றார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்திலும் கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில், இதுவரை 1.40 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் பலர் தடுப்பூசி போட ஆர்வமாக உள்ள நிலையில், மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை என திருப்பி அனுப்புவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை வரை தட்டுப்பாடின்றி கரோனா தடுப்பூசி போடப்பட்டது. சனிக்கிழமை தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிட்டது. 25 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களை விருதுநகர் மாவட்டத்துக்கு வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நேற்று ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே வந்தன. போதிய அளவில் தடுப்பூசி டோஸ்கள் வந்ததும் சிறப்பு முகாம்களில் முழு வீச்சில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x