

முல்லை பெரியாறு அணை இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், அணையின் முழுக் கட்டுப்பாடும் தமிழக அரசிடம் உள்ளது. அணை பகுதியில் கேரள அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நுழைய தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், கடந்த 9-ம் தேதி தமிழக அரசு அனுமதி இன்றி அம்மாநில அமைச்சர் அடூர் பிரகாஷ் தலைமையில் 3 எம்எல்ஏக்கள், இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி. ரதீசன், அரசு அதிகாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் அணை பகுதியில் நுழைந்து பார்வையிட்டதோடு, நீர்வரத்து, வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். அணை பகுதியில் கேரளத்தினர் அத்துமீறி நுழைந்ததற்கு தமிழக அரசு, அரசியல் கட்சியினர், தென்மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அத்துமீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கேரள அரசின் தலைமைச் செயலாளருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். ஆனால் இதுவரை பதில் வரவில்லை. இதற்கிடையில், தென் மாவட்ட விவசாயிகள் கேரள அமைச்சர், எம்எல்ஏ, அரசு அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்தனர். இது தொடர்பான தகவல்கள் கேரள உளவுத்துறை மூலம் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் வி. ரதீசன் திடீரென திருச்சூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சூர் ஆட்சியர் கவுசிகன் இடுக்கி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பொதுப் பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இடுக்கி மாவட்ட ஆட்சியர், கேரள அமைச்சருடன் அனுமதி இல்லாமல் அணை பகுதிக்குள் நுழைந்ததை, தமிழக அரசு தமது கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இடுக்கி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ரதீசன், திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் கவுசிகன் தமிழகம் ஓசூரைச் சேர்ந்தவர். இதனால் அணை விவகாரத்தில் இடுக்கி மாவட்ட அதிகாரிகள் தொல்லை இனி இருக்காது என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.