

காவலர்களின் ஒரு தலைபட்ச செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள், தன்னிடம் வந்து புகார் அளிக்கலாம், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துப்பிரிவு, மகளிர் பிரிவு ஆகிய ‘ரெகுலர்’ காவல் நிலையங்கள், 10-க்கும் மேற்பட்ட சிறப்புப் பிரிவுகள் ஆகியவை உள்ளன.
அடிதடி, தகராறு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு சார்ந்த புகார்கள் தொடர்பாக ஏராளமான மக்கள் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர்.
அதேசமயம், நிதி மோசடி, நகை மோசடி போன்ற சில வகை புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் குற்றம் சாட்டப்படும் நபர் தப்பும் வகையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் இருத்தல், சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டும் நபருக்கு ஆதரவாக செயல்பட்டு, புகார் அளித்தவர் மீதே வழக்குப்பதிந்து அவர்களை அலைகழித்தல் போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன.
இதுதொடர்பாக மாநகரைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது,‘‘ பெரும்பாலான அதிகாரிகள் சட்டத்தை மதித்து செயல்பட்டாலும், சில இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள் உள்ளிட்டோர் சட்ட விதிகளை மீறுகின்றனர். குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களுடன் சேர்ந்து, புகார் அளிப்பவர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
ஒரு மோசடி தொடர்பாக ஒருவர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தால், எதிர்தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு, வழக்குகளை முறையாக விசாரிக்காமலும், புகார் அளித்தவர் மீதே வழக்குப்பதிவும் செய்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக, தற்போதைய மாநகர காவல் ஆணையர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
புகார் அளிக்கலாம்
இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் இன்று (19-ம் தேதி) கூறும்போது,‘‘இது போன்ற செயல்களால் பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் 3 பேர் என்னிடம் தற்போது புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு போல், காவல்நிலையங்களுக்கு புகார் அளிக்கச் சென்று, காவல்துறை அதிகாரிகளின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால் பொதுமக்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், என்னிடம் தயங்காமல் வந்து புகார் அளிக்கலாம்.
அது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை முறையாக விசாரிக்காமல், புகார் கூறியவர் மீது வழக்குப்பதியப்பட்ட வழக்குகள், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் இருக்கும் புகார்கள் தொடர்பாக காவல் நிலையங்கள் வாரியாக ஆய்வு செய்ய ஒரு குழுவையும் விரைவில் அமைக்க உள்ளேன்,’’ என்றார்.