புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 முதல் காலை 5 வரை ஊரடங்கு: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 முதல் காலை 5 வரை ஊரடங்கு: ஆளுநர் தமிழிசை
Updated on
2 min read

புதுச்சேரியில் நாளை முதல் ஊரடங்கு இரவு 10 முதல் காலை 5 வரை இருக்கும், கடற்கரை காலை 5 முதல் மாலை 5 வரை மட்டுமே திறந்திருக்கும். பாண்லேயில் குறைந்த விலையில் முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

”புதுச்சேரியில் நாளை முதல் கடற்கரை காலை 5 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும். அதன் பிறகு மூடப்படும். இரவு 8 மணி வரை ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடலாம். பிறகு பார்சல் வாங்கி செல்லலாம். ஊரடங்கு இரவு 10 முதல் காலை 5 வரை இருக்கும்.

மார்க்கெட்டில் மக்கள் ஒரே இடத்தில் ஒன்றாக கூடக்கூடாது என்று காய்கறி உட்பட இதர பொருட்கள் விற்பனைக்கு தனி இடங்கள் பிரிக்கப்பட உள்ளது.

அனைத்து மத தலைவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தொற்று அதிகமாக உள்ளதால் ஆலோசனை நடத்தி வழிபாடு தலங்கள் தொடர்பாக நடைமுறை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் அவசர கால மருந்து தேவை என்று கடிதம் எழுதி இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே தேவையான மருந்துகள் கையிருப்பில் ஏற்கெனவே உள்ளது. அவசர கால மருந்துகள் புதுச்சேரியில் இருக்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து உள்ளோம்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் கிளினிக் இருக்கிறது. கரோனா தொற்றாளர்களுக்கு படுக்கைவசதி 2325 இருந்தது. தற்போது அதில், 1398 காலியாக உள்ளது. ஆக்ஸிசன் கூடிய படுக்கை 970ல் 625 காலியாக உள்ளது. அதேபோல் 135 செயற்கை சுவாச படுக்கைகளில் 28 காலியாக உள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் 2500 பேர் உள்ளனர். வீடுகளில் தங்க இயலாதவர்களுக்காக கோவிட் கேர் சென்டர் திறக்க துவங்கியுள்ளோம். மக்கள் கவலைப்பட வேண்டாம். முககவசம் கட்டாயமாக்கப்பட்ட சூழலில் ஏழை மக்கள் நலன் கருதி பாண்லே மூலம் குறைந்த விலையில் முக கவசங்கள், கிருமி நாசினி வழங்கப்படும். தமிழகத்தை போன்று ஞாயிற்றுக்கிழை முழு ஊரடங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து பிறகு முடிவு தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பு

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அசோக்நகர் சமுதாய நலக்கூடத்தில் கோவிட் கேர் சென்டர் திறக்க ஆளுநர் வருகைக்காக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளை கையெடுத்து வணங்கி இங்கு கோவிட் கேர் சென்டர் திறக்காதீர்கள். எங்களுக்கு பயமாக இருக்கிறது நாங்கள் வாழ வேண்டாமா என்று கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். அதற்கு அந்த மக்கள், கடவுள்தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி புறப்பட்டனர்.

அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

முன்னதாக ஆளுநர் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு, விதிமுறைகள் குறித்து விளக்கப்படும். நகராட்சி, காவல்துறை அதிகாரிகள் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேவைக்கு ஏற்ப கட்டுப்பாடு மையங்கள் அமைக்க வேண்டும்.

சிறிய அளவிலான கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு மண்டலங்களாக பாதிப்பின்படி பிரித்து விதிமுறைகளை தீவிரமாக்க வேண்டும். ஆஷா, சுகாதார பணியாளர்கள் இதனை கண்காணிக்க வேண்டும். திருமண விழாக்களில் 100 நபர்கள், இறுதி சடங்கில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சந்தைகள் விசாலமான இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in