Published : 19 Apr 2021 06:29 PM
Last Updated : 19 Apr 2021 06:29 PM

உச்சநீதிமன்றத்தின் சமூகநீதித் தீர்ப்பு: முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்: ராமதாஸ்

உச்சநீதிமன்றத்தில் சமூகநீதிக்கு எதிரான வழக்கறிஞரை அமர்த்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 69% இடங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்; மீதமுள்ள 31 இடங்களும் உயர்சாதிக்காரர்களுக்கானவை, அதில் போட்டிக்கு வரக்கூடாது என்று வாதிட வைத்தது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிரானது, இதற்கு காரணமான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன்னாள், இந்நாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பணியாளர் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தக் கூடிய உச்சநீதிமன்றத்தின் இத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர்.

அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த செயலால் வேதியியல் பாட ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது. இந்த அநீதியை பலமுறை கண்டித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை சரி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

இந்த அநீதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.சி மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவுப் பணியிடங்களில் தர வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்.பி.சி. மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து நிராகரித்திருக்கிறது.

பின்னடைவுப் பணியிடங்களுக்கும், நடப்புக் காலியிடங்களுக்கும் ஒரே நேரத்தில் போட்டித் தேர்வு நடத்தப்படும் போது, அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும். அடுத்த நிலையில் உள்ளவர்கள் பின்னடைவுப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும், மூன்றாவது நிலையில் நடப்புக்காலியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால், அதிக மதிப்பெண் பெற்ற எம்.பி.சி மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல் பின்னடைவுப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது பெருந்தவறு. இத்தவறு சரி செய்யப்பட வேண்டும். எம்.பி.சி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுவது பிற சமூகத்தவரின் உரிமைகளை எந்த வகையிலும் பறிக்காது’’ என்று சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு பல முன்னுதாரங்களை சுட்டிக்காட்டி தீர்ப்பில் கூறியிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி இதே வாதங்களைத் தான் முன்வைத்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் எம்.பி.சி மற்றும் பட்டியலினத்தவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், அதிக மதிப்பெண் பெற்ற எம்.பி.சி மாணவர்களை பொதுப்பட்டியலில் சேர்த்தால், அவர்களே அதிக இடங்களைக் கைப்பற்றி விடுவார்கள் என்று அபத்தமான வாதத்தை முன்வைத்தது.

இந்த வாதத்தை உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகிய இரண்டுமே கடுமையாக கண்டித்ததுடன், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாடு தவறு என்றும், அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் உறுதிபட கூறியிருக்கின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் என்பது சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கான அமைப்புகளில் ஒன்றாகும். ஆனால், சமூகநீதியை குழி தோண்டி புதைப்பதில் இந்த அமைப்பு முன்னணியில் இருப்பது நியாயமற்றது. பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி, இரு நீதிபதி கொண்ட அமர்வு தீர்ப்பளித்தும் அதை செயல்படுத்த மறுத்ததும் ஏற்க முடியாதவை.

அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தில் சமூகநீதிக்கு எதிரான வழக்கறிஞரை அமர்த்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 69% இடங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்; மீதமுள்ள 31 இடங்களும் உயர்சாதிக்காரர்களுக்கானவை. அதில் போட்டிக்கு வரக்கூடாது என்று வாதிட வைத்தது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிரானது. இதற்கு காரணமான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன்னாள், இந்நாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும்.

இந்த சர்ச்சை இத்துடன் ஓய்ந்து விடாது. வேதியியல் பாடத்தில் மட்டுமின்றி தமிழ் பாடத்தில் 28 பேர், பொருளியலில் 12 பேர், வரலாற்று பாடத்தில் 6 பேர், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என மொத்தம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், இந்தப் பாடங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

அந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலையும் திருத்தியமைத்து, பாதிக்கப்பட்ட எம்.பி.சி மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட போதும் இதேபோன்ற சமூக அநீதி நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்பதால், அது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். அப்போதும் எம்.பி.சி வகுப்பினர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சமூகநீதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x