Published : 19 Apr 2021 04:00 PM
Last Updated : 19 Apr 2021 04:00 PM

என்னை முகக்கவசம் அணியச் சொல்ல நீ யார்?- நடுவானில் விமானத்தில் தகராறு செய்த கேரள பயணி: விமான நிலைய போலீஸார் வழக்குப்பதிவு

பிரதிநிதித்துவ படம்

சென்னை

கண்ணூரிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்த நிலையில், அதில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணியாமல் அதுகுறித்து எடுத்துச் சொன்ன விமானப்பணிப் பெண்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார், சக பயணிகள் அவரை கண்டித்த நிலையில், விமானம் சென்னையில் தரையிறங்கியதை அடுத்து அவரை போலீஸாரிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

கேரளா மாநிலம் கண்ணணூரிலிருந்து சென்னை விமான நிலையம் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 49 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் குமார்(46) என்கிற மென்பொறியாளரும் அந்த விமானத்தில் பயணம் செய்தார்.

கரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் மிகவேகமாக பரவுவதால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக புழங்கும் இடங்களில் தனிமனித விலகல், சானிடைசர், வெப்ப பரிசோதனை, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானம் முழுவதும் குளிரூட்டப்பட்ட ஒன்று என்பதால் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கழற்றக்கூடாது என்பது கட்டாயமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் நேற்று வந்த விமானத்தில் பயணித்த கேரள மென்பொறியாளர் பிரதீப்குமாா் மட்டும் விமானத்திற்குள் முகக்கவசம் அணியாமல் பயணித்துள்ளார்.

இதுகுறித்து விமானப் பணிப்பெண்கள் அவரை எச்சரித்து முகக்கவசம் அணியும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அவர் நான் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முகக்கவசம் அணிந்திருந்த சகப்பயணிகள் கூறியும் அணிய மறுத்துள்ளார். இதையடுத்து விமான கேப்டனிடம் விமானப்பணிப் பெண்கள் புகார் செய்தனர்.

விமான கேப்டன் விமானத்திலிருந்தே மென்பொறியாளர் பிரதீப் குமார் குறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானம் இரவு 11.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. பயணிகள் ஒவ்வொருவராக இறங்கினர். உடனடியாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் சென்றனர்.

முகக்கவசம அணியாமல் விமானப்பணிப் பெண்களிடம் தகராறு செய்த பயணி பிரதீப்குமாரிடம் விசாரித்தனர். அப்போதும் அவர் நீங்கள் யார் என்னை முகக்கவசம் அணியச் சொல்வது என்று அதே தொனியில் பேசியுள்ளார். இதையடுத்து பயணி பிரதீப்குமாரை விமானத்தை விட்டு, கீழே இறக்கினர்.

பின்னர் அவரை இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்து சென்னை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் மீது விமானத்திற்குள் முகக்கவசம் அணியாமல் பயணித்து கரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியது, முகக்கவசம் அணிய கூறிய விமான ஊழியர்களை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

நடுவானில் பறந்த விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த விமான பயணியை விமான ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x