ஆளுநர், அவரது ஆலோசகர்கள், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்: நாராயணசாமி அறிவுறுத்தல்

செ. ஞானபிரகாஷ் படம் எம். சாம்ராஜ்
செ. ஞானபிரகாஷ் படம் எம். சாம்ராஜ்
Updated on
1 min read

தடுப்பூசி மையத்தில் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொள்வதால் மட்டும் கரோனாவை தடுக்க முடியாது, ஆளுநர், ஆளுநரின் ஆலோசகர்கள், தலைமைச் செயலர், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது,

"பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் புதுச்சேரியில் 18 வயது பூர்த்தி அடைந்தோருக்கும் தடுப்பூசி தேவை என்று கேட்டுள்ளேன். ஏழை மக்களுக்கு வாழ்வு ஆதாரத்தை உறுதி செய்ய அரிசி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை கோரியுள்ளேன்.

கரோனா காலத்தில் கடந்தாண்டு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் களத்தில் இறங்கி பணியாற்றினோம். தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் தற்போது நியமிக்கப்படவில்லை. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரை காவல்துறையினர், வருவாய்த்துறையினர் கண்காணிப்பதில்லை.

துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிகாரிகள் கூட்டம் நடத்தி விட்டு தடுப்பூசி மையம் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்வதால் மட்டும் கரோனாவை தடுக்க முடியாது. தற்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடப்பதால் ஆளுநரின் ஆலோசகர்கள்,தலைமைச்செயலர், அரசு செயலர்கள் களத்தில் இறங்கி பணியாற்றவேண்டும். ஆர்.டி.பி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளை தர தற்போது மூன்று நாட்களாகிறது.

அதை ஒரு நாளுக்குள் தர வேண்டும். மூன்று நாட்கள் தாமதமாக வருவதால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொற்று அறிகுறியுடன் பரிசோதனைக்கு வருவோரை வீட்டுக்கு அனுப்பாமல் முடிவு வரும் வரை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தங்க வைப்பதும் கரோனாவை கட்டுப்படுத்தும். முதலில் எந்த ஐஏஎஸ் அதிகாரியாவது கரோனா மேற்பார்வை பணியில் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.

முக்கியமாக கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆட்சியர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அரசியல் கட்சித்தலைவர்களை குறை கூறுவதை ஆளுநர் விட்டுவிட்டு, களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in