Published : 19 Apr 2021 03:36 PM
Last Updated : 19 Apr 2021 03:36 PM

தியேட்டர் அதிபர்கள் கரோனா சூழ்நிலை அறிந்து செயல்படுங்கள்: காங்கிரஸ் வேண்டுகோள்

சென்னை

கரோனா சூழ்நிலைக்குத் தகுந்தபடி இரவுக்காட்சியை தவிர்த்து காட்சி நேரங்களை மாற்றியமைத்துக் கொள்ள தியேட்டர் அதிபர்கள் முன்வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“தமிழக அரசு அறிவித்திருக்கும் இரவுநேர ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களை மூட முடிவு செய்திருப்பதாக தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து இருப்பது துரதிருஷ்டவசமானது. இப்படி தியேட்டர்களை மூடுவோம் என்ற அறிவிப்பினை, அரசோ, பொதுமக்களோ நிச்சயமாக கண்டுகொள்ளப் போவதில்லை ஆனால் பாதிக்கப்படப்போவது திரைப்படத்துறையினர்தான்.

குறிப்பாக வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு திரைத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தொலைக்காட்சிகளின் தாக்கமும் ஒ.டி.டி தளங்களின் பயன்பாடும் அதிகரித்ததன் பயனாக இரவுக் காட்சிகளுக்கு கூட்டம் குறைந்து, இரவுக் காட்சிகளே பல நேரங்களில் ரத்துசெய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் காட்சி நேரங்கள், கடைசி காட்சி 10 மணிக்குள் முடிவடைந்து விடுவதாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

வார நாட்களில், 12.00, 03.00, 06.00 எனவும், வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் காலை 9 மணிக்கு கூடுதலாக ஒரு காட்சி என்று தியேட்டர்களின் காட்சி நேரத்தை மாற்றி அமைத்து அரசின் அனுமதி பெற்றால், பெருந்தொற்று காலம் மட்டுமல்ல, மற்ற நேரங்களிலிலும்கூட தியேட்டர்கள் செயல்படுவதில் தொய்வு ஏற்படாது.

எனவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில், காட்சி நேரங்களை மாற்றி அமைப்பது பற்றியும், தியேட்டர்களில் குடிநீர் முதல் தின்பண்டங்கள் வரை பலமடங்கு விலையில் விற்கப்படுவதைத் தடுப்பது பற்றியும் திரையுலகின் அனைத்துத் தரப்பினரும் பேசி ஒரு நல்ல முடிவெடுத்தால், எந்த காலத்திலும் தியேட்டர்களை மூட வேண்டிய அவசியம் இருக்காது”.

இவ்வாறு சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x