Published : 19 Apr 2021 12:32 PM
Last Updated : 19 Apr 2021 12:32 PM

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ்: என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?- மருத்துவமனை அறிக்கை

பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று திடீரென ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை அணியில் விளையாடிய 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கிய முத்தையா முரளிதரன் (49) இலங்கைத் தமிழர் ஆவார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2010 ஆம் ஆண்டு விளையாடிய போது ஓய்வை அறிவித்தார். அடுத்த ஆண்டு ஒருநாள் போட்டியிலும் ஓய்வை அறிவித்தார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 1155 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் ஆவார். இவர் இதுவல்லாமல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவரது ஓய்வுக்கு முன் 2008 ல் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடத் தொடங்கிய அவர் பின்னர் ஆர்சிபி அணிக்காக விளையாட தொடங்கினார். பின்னர் ஓய்வை அறிவித்த அவர் பின்னர் பந்துவீச்சு பயிற்சியாளராக மாறினார்.

தமிழக வீரர் நடராஜனுக்கு முக்கிய பயிற்சியாளர் இவரே, தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது 49 வது பிறந்தநாளை முத்தையா முரளிதரன் கொண்டாடினார். இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உடனடியாக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“49 வயதாகும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் முத்தையா முரளிதரன் இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிகரமாக ஆஞ்ஜியோ செய்யப்பட்டு ஆஞ்ஜியோ பிளாஸ்ட் மூலம் ஸ்டென்ட் பொறுத்தப்பட்டது.

(ஒரு ஸ்டென்ட் என்பது இரத்த நாளத்தில் வைக்கப்படும் கண்ணி குழாய். இது நாளத்தை அகலப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இதயத்தின் தமனிகளில் ஸ்டெண்டுகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது கரோனரி தமனிகள் என்றும் அழைக்கப்படுகிறது).

மூத்த இருதய சிகிச்சை நிபுணர் செங்கூட்டுவேலன் மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் நலம் பெற்ற முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி அவர் தனது இயல்பான பணியினை தொடரலாம்”.

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x