தலைவர்களே தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதா?- எல்.முருகன் கண்டனம்

தலைவர்களே தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதா?- எல்.முருகன் கண்டனம்
Updated on
1 min read

இரண்டு தவணை கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட அரசியல் தலைவர்களே தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதா என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதற்கிடையே கரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடிகர் விவேக் மாரடைப்பால்தான் மரணம் அடைந்துள்ளார் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக்கின் வீட்டுக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், விவேக்கின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவர் கரோனா தடுப்பூசியால் இறக்கவில்லை. இதைத் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளரே கூறிய பிறகும் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அவர்களைத் தண்டிக்க வேண்டும்.

தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவது தேவையில்லாத ஒன்று. சமுதாயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டியவர்கள் தலைவர்கள். அவர்களே இரண்டு தவணை கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விட்டனர். அப்படிப்பட்ட தலைவர்களே சமுதாயத்தில் மக்கள் மத்தியில், தவறான நோக்கத்தில், திசை திருப்பும் முயற்சியில் தடுப்பூசி குறித்துப் பீதியைக் கிளப்புகின்றனர்.

மக்களே நேரடியாகச் சென்று தன்னார்வத்துடன் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் புரளியைக் கிளப்புவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என்று எல்.முருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in