Last Updated : 19 Apr, 2021 11:38 AM

 

Published : 19 Apr 2021 11:38 AM
Last Updated : 19 Apr 2021 11:38 AM

பட்டாசுக் கடையில் தீ விபத்து; வருவாய், காவல், தீயணைப்புத் துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

காட்பாடி அருகே லத்தேரியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வருவாய், காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியில் மோகன் (55) என்பவரது பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் தேஜஸ் (8), தனுஜ்மோகன் (6) ஆகியோர் தீயில் கருகி நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீ விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், அனைத்து வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கும் பல்வேறு வழிமுறைகளை வழங்கி அதைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மோகன், தேஜஸ், தனுஜ்மோகன் (கோப்புப்படம்)

மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:

* வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பட்டாசுக் கடைகளையும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் மூடி வைக்க வேண்டும்.

* அனைத்து பட்டாசுக் கடைகளும் தீ பாதுகாப்பு விதிமுறைகளும், உரிமம் சார்ந்த நிபந்தனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

* எக்காரணத்தைக் கொண்டும் பட்டாசுக்கடை, எளிதில் விபத்து ஏற்படக்கூடிய கடைகளில் குழந்தைகள் மற்றும் கடை சாராத நபர்களை அனுமதிக்கக்கூடாது

* பட்டாசுக்கடைக்கான உரிமம் வைத்திருப்பவர்கள் வரும் ஜூலை மாதம் 30-ம் தேதி வரை புதிதாக பட்டாசு ரகங்களைக் கொள்முதல் செய்யக்கூடாது. தற்போது இருப்பு இருக்கக்கூடிய பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும்‌.

* இருப்பில் இருக்கும் பட்டாசுகளில் அதிகமான சேதத்தை ஏற்படுத்தக் கூடிய பட்டாசு வகைகளை கடையில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.

* மாவட்டத்தில் உள்ள பட்டாசுக் கடைகளில் மின் இணைப்புகளை மீண்டும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

* காவல் துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறை ஆகிய துறைகள் இணைந்து இன்று முதல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பட்டாசுக் கடைகளில் ஆய்வு நடத்த வேண்டும்.

* வேலூர் மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள பட்டாசுக்கடைகளை, புறநகர்ப் பகுதிகளில் மாற்றியமைக்க ஆவண செய்ய வேண்டும்.

* பட்டாசுக் கடைகளுக்குச் செல்லக்கூடிய சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் எளிதாகச் சென்று, வரக் கூடிய அளவிற்குப் போதிய அகலம் உள்ளதா ? என்பதைக் காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

* இவை அனைத்தையும் சரி பார்த்து வரும் 23-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை)) அந்தந்த வருவாய்க் கோட்டாட்சியர்கள், அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

* இதுதவிர, நாளை (20-ம் தேதி) காலை 10.30 மணி அளவில் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் பட்டாசுக்கடை உரிமம் வைத்துள்ளவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

அதில் வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி, மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், மின்சாரத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் சண்முகசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x