

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான பயணம் குறித்து போக்குவரத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகதினசரி கரோனா பாதிப்பு 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனவே,கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டுபேருந்துகள், ரயில்கள், மெட்ரோரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. இருப்பினும், கரோனா தொற்றில் இருந்து மக்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வெளியூர் பயணத்தின்போது அரசு அறிவித்துள்ள அறிவுரைகளை மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது. முகக் கவசம் அணிவது, கைகளை சானிடைசர் மூலம் கழுவுவது, சமுக இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
மேலும், தங்களுக்கான குடிநீர், உணவுகளை வீட்டில் இருந்தே தயாரித்து கொண்டு வருவது நல்லது. அவசர பயணத்தைத் தவிர மற்றவெளியூர் பயணங்களை கூடுமானவரை தவிர்க்கலாம். குறிப்பாக, முதியோர், நோயாளிகள் வெளியூர் பயணம் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல், எந்த பயணம் மேற்கொண்டாலும் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது நல்லது. கூட்ட நெரிசலுடன் பயணிக்க வேண்டாம். மேலும், வெளியூர் பயணம் முடித்து வீடுகளுக்கு திரும்பும்போது, சிறியஅளவில் ஏதாவது அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.