

வதந்திகளை நம்பாமல் மக்கள்கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கரோனா தொற்று குறித்து இந்திய விஞ்ஞானிகளின் முனைப்பு (ஐஎஸ்ஆர்சி) சார்பில், கரோனா தடுப்பூசி குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி இணையவழியில் நேற்று நடைபெற்றது. ஐஎஸ்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் ராமானுஜம் வரவேற்றார். முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவகள் கூறியதாவது:
ஏ.பி.ஃபரூக் அப்துல்லா: உலகில் 130 நாடுகளில் கரோனா தடுப்பூசி இல்லை. இந்தியா ஏற்றுமதிசெய்யும் நிலையில் உள்ளது. நமக்கு அருகிலேயே தடுப்பூசி கிடைக்கிறது. ஆனால், தவறான வதந்திகள், கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. நாடு முழுவதும் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 180 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இறப்புக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும்போது மரணம் .03 என்ற அளவில் உள்ளது. இதுவே 1 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் மரணம் 1,200 ஆக இருக்கிறது. தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.
அமலோற்பவநாதன்: நடிகர்விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மறுநாள் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 59. இந்த வயதில்யாருக்கும் மாரடைப்பு வரலாம்.மாரடைப்பு ஏற்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் மருத்துவமனைக்கு வரும் முன்பே உயிரிழக்கின்றனர். மருத்துவமனையில் 25 சதவீதத்தினர் இறக்க நேரிடுகிறது. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் விவேக் இறந்துவிட்டார் என்பது தவறானது. சிலருக்கு ரத்தக் குழாயில் சிறிய அளவிலான நோயால் அடைப்பு இருக்கும். எந்த சோதனைசெய்தாலும் அடைப்பு தெரியாது. 5 நிமிடத்துக்கு முன்பு நன்றாக இருப்பார்கள். அடுத்த 5 நிமிடத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டுஇறந்துவிடுவார்கள். விவேக் மரணத்துக்கு இதுதான் காரணம்.
இந்தியாவில் பல மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மத்திய, மாநில அரசுகள் உடனே மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
டி.சுந்தரராமன்: இந்தியாவில் தடுப்பூசிகளின் உற்பத்தி குறைவாக உள்ளது. அதனால்தான் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட முடியவில்லை. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டும். ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல்நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கரோனா 2-வது அலைக்கு பின்னர் 3-வதுஅலை வரும். இதனால், அச்சமடைய தேவையில்லை. பல நாடுகள் 3-வது அலையை தடுத்துள்ளன. இந்தியாவும் தடுக்கும்.
மரபணு ஆராய்ச்சியாளர் எஸ்.கிருஷ்ணசாமி: கரோனா தொற்று சிகிச்சைக்கு இப்போதே படுக்கைகளை தயார் செய்ய வேண்டும். தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 3-வது அலை வந்த பிறகும் இதே நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.