முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் காலமானார்

பாப்பாசுந்தரம்
பாப்பாசுந்தரம்
Updated on
1 min read

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான அ.பாப்பாசுந்தரம்(86) நேற்று காலமானார்.

கரூர் மாவட்டம் குளித்தலைஅருகே உள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் அ.பாப்பாசுந்தரம்(86). முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான இவர், ஏப்.7-ம் தேதி வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியானது.

அதன்பின்னர் கரோனா குணமான நிலையில், நுரையீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து, அவரது சடலம் சொந்த ஊரான வளையப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (ஏப்.19) பாப்பா சுந்தரம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார். அதன்பின்னர், அவரது சடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் கரூர் மாவட்டம் வளையப்பட்டியில் 1934 செப்.30-ல் பிறந்தார். பாலாமணி என்ற மனைவி, குளித்தலை கிழக்கு ஒன்றிய அதிமுகசெயலாளராக உள்ள கருணாகரன், கல்யாணகுமார் ஆகிய 2 மகன்கள், கலாவதி என்ற மகள் உள்ளனர்.

1972-ம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர். 1989-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவானார். 1991-ல் அதிமுகவின் சார்பில் மீண்டும் குளித்தலையில் போட்டியிட்டு 2-வது முறை எம்எல்ஏவானார்.

2001-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்று 3-வது முறை எம்எல்ஏவான அவர், 2002-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

2011-ல் மீண்டும் குளித்தலையில் வென்று 4-வது முறையாக எம்எல்ஏவானார். 2000 முதல் 2003 வரை கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in