

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் யானை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் முறைகேடு செய்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை தல்லாகுளம் கமலா நகரைச் சேர்ந்த ராஜன்ராம் என்பவர் மனைவி மாலா (41). இவரது தாத்தா காலத்தில் யானை வளர்த்துள்ளனர். இதையொட்டி தானும் யானை வளர்க்க வேண்டும் என மாலா விரும்பியுள்ளார். அதற்காக கேரளாவைச் சேர்ந்த 2 பேரை அணுகியுள்ளார்.
இதையடுத்து கடந்த 2017-ல் கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த சாஜி காவேரி, சனல் மான்கர் பனகல் ஆகியோர் மதுரையில் மாலாவைச் சந்தித்தனர். அப்போது, கேரளாவில் இருந்து யானை வாங்கித் தருவதாகக் அவர்கள் மாலாவிடம் கூறியுள்ளனர்.
இழுத்தடிப்பு..
இதை நம்பிய மாலா, அவர்களிடம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் யானைவாங்கித் தராமல் இழுத்தடித்த அவர்கள், ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் மாலா புகார் அளித்தார். இதையடுத்து, சாஜி காவேரி, சனல் மான்கர் பனகல் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.