Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

மதுரை - டெல்லிக்கு வாரமிருமுறை சிறப்பு ரயில்கள்: நவீன வசதி கொண்ட பெட்டிகள் இணைப்பு

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை - சென்னை வாரமிருமுறை சிறப்பு ரயிலில் எல்எச்பி ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் சேவை தொடங்கியது. இதன் இணை ரயிலான மதுரை - டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் ஏப்ரல் 20 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மதுரையிலிருந்து ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.35 மணிக்கு நிஜாமுதீன் சென்று சேரும். மறுமார்க்கத்தில் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் - மதுரை வாரம் இருமுறை சேவை சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் மறு அறிவிப்பு வரும் வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மறு மார்க்கத்தில் டெல்லியில் அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட்டு வியாழன் மற்றும் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா, பல்ஹார்ஷா, நாக்பூர், போபால், ஜான்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த இரு ரயில்களிலும் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த ரயில் பெட்டிகளுக்கு தேவையான மின்சாரம் வழங்க தனி ஜெனரேட்டர் பெட்டிகளில் இருப்பதால், கனமான பேட்டரிகள் இன்றி எடை குறைந்த எல்எச்பி. பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயிலை அதிவேகமாக 200 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். தற்போது 180 கி.மீ. வேகம் வரை இயக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஐசிஎப் பெட்டியை காட்டிலும் எல்எச்பி பெட்டியின் நீளம் 23.54 மீட்டர், அகலம் 3.24 மீட்டர் உள்ளதால் அதிகளவில் மக்கள் பயணம் செய்யலாம்.

எதிர்பாராத விபத்துகளின்போது, ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதுவதற்கோ, திரும்புவதற்கோ வாய்ப்பில்லை.

ஒவ்வொரு பெட்டியிலும் அதிவேகத்தில் செல்லும்போது ரயிலை நிறுத்த சிறப்பு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. ரயில் ஓடும் சத்தம் பழைய பெட்டிகளின் 100 டெசிபலுக்கு பதிலாக 60 டெசிபல் அளவில் இருக்கும் என மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x