Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

கரோனா ஊரடங்கால் வேலையிழந்த பொறியாளருக்கு கைகொடுத்த இயற்கை விவசாயம்

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார் பொறியாளர் ஒருவர்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு பலருடைய வேலையைப் பறித்து விட்டது. பலரை வேறு வேலைகளுக்கு திருப்பி விட்டுள்ளது. அந்த வகையில் வேலையிழந்த கட்டுமானப் பொறியாளர் ஒருவருக்கு இயற்கை விவசாயம் கை கொடுத்து வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், போடுவார்பட்டி ஊராட்சி வி. காமாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் விஜயபாண்டி (33). கட்டுமானப் பொறியாளரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் வேலை இழந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பினார்.

இந்நிலையில், மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்பமின்றி, தனது தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய முயற்சி மேற்கொண்டார். சந்தையில் வாய்ப்பிருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்தார். தற்போது அவற்றை அறுவடை செய்து அரிசியாக்கி விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து விஜயபாண்டி கூறியதாவது:

கரோனா ஊரடங்கால் வேலை இழக்க நேரிட்டது. இதனால் விவசாயத்தின் மீது கவனத்தை திருப்பினேன். எனது தந்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யாமல் கைவிட்ட 2 ஏக்கர் நிலத்தை பண்படுத்தி கிணற்றுப் பாசனம் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களான அறுபதாம் குறுவை, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குருவை, சின்னார், கிச்சலி சம்பா போன்ற நெல் ரகங்களை நடவு செய்தேன். இயற்கை முறையில் விவசாயம் செய்ததால் ஏக்கருக்கு 10 மூட்டை மகசூல் கிடைத்தது. ஒரு கிலோ ரூ. 80-க்கு விற்கிறேன். இதன் மூலம் ஓரளவு வருவாய் கிடைத்தது.

தற்போது தினமும் வருவாய் கிடைக்கும் வகையில் தக்காளி, மிளகாய், வெள்ளரி நடவு செய்துள்ளேன். விவசாயிகள் விளைவித்த பொருட்களை விவசாயிகளே விளைவித்தால்தான் முன்னேற முடியும். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியம் வழங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x