Last Updated : 19 Apr, 2021 03:16 AM

 

Published : 19 Apr 2021 03:16 AM
Last Updated : 19 Apr 2021 03:16 AM

கார்களில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமா? - போலீஸ் சோதனையால் தொடரும் குழப்பம்

மதுரையில் முகக்கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரிகள். (கோப்புப் படம்)

மதுரை

கார்களில் பயணம் செய்வோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனப் போலீஸார் வலியுறுத்துவதால், பல இடங்களில் கார் பயணிகளுக்கும்- போலீஸாருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக முகக் கவசம் அணியாமல் நடந்து செல்வோர், இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் போலீஸார் அபராதம் வசூலிக்கின்றனர். இந்த அபராத வசூலுக்கு இலக்கு நிர்ணயத்திருப்பதால் போலீஸார் காரில் செல்வோரையும் முகக்கவசம் அணிய வற்புறுத்துகின்றனர். இதனால் பல இடங்களில் காரில் பயணம் செய்வோருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

இது குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் கூறியதாவது:

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதோரிடம் அபராதம் வசூலிக்கலாம் என தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள்தான் பொது இடங்களாகும். கார் தனியார் சொத்து. அதில் பயணம் செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சட்டத்தில் கூறப்படவில்லை.

இருப்பினும் சட்டவிரோதமாக ஒவ்வொரு 2 கி.மீ.க்கு ஒருமுறை கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கின்றனர். காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை என மூன்று துறையினரும் தனித்தனியாக வாகனத்தணிக்கை செய்கின்றனர். இவர்களின் அணுகுமுறை ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறுபடுகிறது. இதனால் பல இடங்களில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவாகிறது.

அபராதத்துக்குத் தரப்படும் ரசீதுகளில் கையால் எழுதப்பட்டுள்ளது. அதில் கையெழுத்திட்டுள்ள அலுவலர், சோதனை நடைபெறும் இடம் ஆகியவை இடம் பெறவில்லை. இதனால் அபராதமாக வசூலாகும் பணம் அரசு கருவூலத்துக்குச் செல்கிறதா?, இல்லையா? என்ற சந்தேகம் உள்ளது. இதனால், முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையில் சட்ட விதிகளைப் பின்பற்றாமல் அமல்படுத்துவதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முகக்கவசம் அணியாதோரிடம் அரசு உத்தரவின் பேரில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்குத் தனி இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முகக்கவச அபராத வசூலுக்கு மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களால் முன்கூட்டியே கையெழுத்திடப்பட்டு பெறப்பட்ட ரசீது வழங்கப்படுகிறது. இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x