

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் அண்டோ பிரைட்டன் (27). பி.டெக் (ஐடி) படித்துள்ள இவருக்கு தனியார் வங்கி ஒன்றில் விற்பனை மேலாளர் பணி கிடைத்தது. ஆனால், அந்தப் பணியில் அவருக்கு நாட்டமில்லை. 2 ஆண்டுகள் மட்டுமே அந்தப் பணியில் நீடித்தார். அதன் பிறகு சொந்த ஊருக்கு வந்த அண்டோ பிரைட்டன், தங்கள் குடும்பத் தொழிலான பனையேறும் தொழிலைக் கையில் எடுத்தார்.
பனையேறும் தொழில் இன்றைய சமுதாயத்தில் கவுரவக் குறைச்சலாகப் பார்க்கப்படும் நிலையில், தனது மகன் அந்தத் தொழிலுக்கு வந்துவிட்டானே என, அவரது தந்தைக்கு முதலில் கவலையாக இருந்துள்ளது. ஆனால், அண்டோ பிரைட்டனின் பிடிவாதத்தைப் பார்த்து, அவரது விருப்பத்திலேயே விட்டுவிட்டார்.
பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்குவது, பதநீர் காய்ச்சி கருப்பட்டி, கற்கண்டு தயாரித்தல் போன்ற அனைத்து வேலைகளையும் அவரே செய்தார். அதுமட்டுமல்ல பனை ஓலையில் இருந்து கலைநயமிக்க பல பொருட்களைத் தயாரிக்கவும் கற்றுத்தேர்ந்தார். இன்று பனை பொருட்களில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து உள்ளூரில் விற்பனை செய்வதோடு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார்.
அண்டோ பிரைட்டன் கூறியதாவது:
''எந்தத் தொழிலும் கேவலமானது இல்லை. எனது தந்தை, தாத்தா போன்றோர் பனையேறும் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலைத்தான் நானும் செய்கிறேன். அதில் எனக்கு கவுரவக் குறைச்சல் ஏதும் இல்லை. எங்கள் தோட்டத்திலேயே சுமார் 80 பனை மரங்கள் உள்ளன.
அதில் நானும், இன்னொரு நபரும் ஏறி பதநீர் இறக்குகிறோம். மேலும், இந்தப் பகுதியில் பனையேறும் மற்றவர்களிடம் இருந்தும் பதநீரை வாங்குகிறேன். தினமும் சுமார் 200 லிட்டர் பதநீர் கிடைக்கிறது. இதனை அப்படியே பதநீராகவும், கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரித்தும் விற்பனை செய்கிறோம். இதற்காக ஊரிலேயே சிறிய கடை வைத்துள்ளோம். கடையை எனது தந்தை பார்த்துக்கொள்கிறார். பதநீர் காய்ச்சுவது, கருப்பட்டி தயாரித்தல் போன்ற பணிகளை எனது தாயார் கவனித்துக்கொள்கிறார்.
பதநீர் ஒரு லிட்டர் ரூ.80, கருப்பட்டி கிலோ ரூ.350, பனங்கற்கண்டு கிலோ ரூ.850, சுக்கு கருப்பட்டி ரூ.400 என விற்பனை செய்கிறோம். பனங்கிழக்கு மற்றும் பனங்கிழங்கு மாவு போன்றவையும் விற்பனை செய்கிறோம். இதனைத் தவிர பனை ஓலையில் இருந்து கீ செயின், பூச்செண்டு, பூங்கொத்து, கிலுக்கு, பெட்டிகள், பென் ஸ்டாண்ட் உள்ளிட்ட சுமார் 40 வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். பனை ஓலை பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பனைப் பொருட்கள் பயிற்சி நிறுவனத்தில் 4 மாதம் பயிற்சி முடித்துள்ளேன்.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு
பனை ஓலை பொருட்களை நான் தயாரிப்பதோடு, திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட பெண்களும் தயாரித்துத் தருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பனை பொருட்கள் விலை அதிகமாக இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இந்தத் தொழிலில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பதநீர் சீஸன் இல்லாத நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கல்லூரி மாணவர்கள், மகளிர் குழுவினருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு குறித்துப் பயிற்சி அளித்து வருகிறேன். இதுவரை சுமார் 200 பேருக்குப் பயிற்சி அளித்துள்ளேன். இந்தத் தொழிலில் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. இது எனக்கு மன நிறைவைத் தருவதோடு, உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கிறது''.
இவ்வாறு அண்டோ பிரைட்டன் தெரிவித்தார்.