விளாத்திகுளம், புதூர் பகுதியில் குண்டு மிளகாய் பறிக்கும் பணி தீவிரம்: விலை இருந்தும் நல்ல விளைச்சல் இல்லை

விளாத்திகுளம் பகுதியில் பறிக்கப்பட்ட குண்டு மிளகாய் பழங்கள்  வைப்பாற்று மணலில் காய வைக்கப்பட்டுள்ளன.
விளாத்திகுளம் பகுதியில் பறிக்கப்பட்ட குண்டு மிளகாய் பழங்கள் வைப்பாற்று மணலில் காய வைக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

விளாத்திகுளம், புதூர் பகுதியில் குண்டு மிளகாய் பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு நல்ல விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விளாத்திகுளம் தொகுதியில் ஒருபுறம் வைப்பாற்று பாசனம் என்றால், மறுபுறம் பெரும்பாலும் மானாவாரி நிலங்களாகவே உள்ளன.

கடந்த ஆண்டு புரட்டாசி மாதம் பெய்த மழையைத் தொடர்ந்து வெங்காயத்துக்கு ஊடு பயிராகவும், தனியாகவும் என, சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி விவசாயிகள் குண்டு மிளகாய் பயிரிட்டனர். 120 நாட்கள் பயிரான மிளகாய், வழக்கமாக தை மாத கடைசியில் முதல் பறிப்பும், மாசி மாதம் 2-வது வாரத்தில் இரண்டாம் பறிப்பும், பங்குனி தொடக்கத்தில் 3-ம் பறிப்பும் என, 3 கட்டங்களாக பறிக்கப்படுகின்றன.

தற்போது குண்டு மிளகாய் பழங்கள் பறித்து, காய வைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், கடந்த ஜனவரி வரை தொடர்ந்து பெய்த மழையால் ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில், ஒரு குவிண்டால் மிளகாய் தான் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.

மழையால் பாதிப்பு

இதுகுறித்து புதூரைச் சேர்ந்த விவசாயி எழிழரசன் கூறும்போது, “ கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்தது. ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக அதனை விற்பனை செய்யாமல், நல்ல விலைக்காக காத்திருந்தோம். இதில், எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதலில் ஒரு குவிண்டால் குண்டு வத்தல் ரூ.10 ஆயிரத்துக்கும், அதன் பின்னர் ரூ.8 ஆயிரத்துக்குமே கொள்முதல் செய்தனர்.

இந்தாண்டு, ஏக்கருக்கு 7 முறை உழவு, அடியுரம், களை பறித்தல், விதை மற்றும் மிளகாய் பறிப்பு என ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தோம். புரட்டாசி மாதம் போக்கு காட்டிய மழை, அதன் பின்னர் அடைமழையாக பெய்து கெடுத்தது. இதனால் ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில், ஒரு குவிண்டால் தான் கிடைக்கிறது. ஆனால், ஒரு குவிண்டால் குண்டு வத்தல் ரூ.25 ஆயிரம் வரை கொள்முதல் செய்கின்றனர். விலை இருந்தும் விளைச்சல் இல்லை” என்றார்.

அரசு கொள்முதல் செய்யுமா?

விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் கூறும்போது, “பயிர் காப்பீடு இழப்பீட்டு பணத்தை அந்தந்த ஆண்டே விடுவித்தால், எங்களுக்கு பயனாக இருக்கும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாசிப் பயறு, உளுந்து ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர். அதேபோல மானாவாரி நிலங்களில் விளையும் அனைத்து பொருட்களையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சிகள் தோறும் தானிய கிடங்கு அமைக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in