

கரோனா வேகமாக பரவி வருவதால் கன்னியாகுமரியில் அனைத்து சுற்றுலா மையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் வியாபாரிகள் என சுற்றுலாவை நம்பி வருவாய் ஈட்டிய ஆயிரக்கணக்கானோர் மீண்டும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப் பட்டன. நவம்பர் மாதம் வரை இதேநிலை தொடர்ந்ததால் சுற்றுலாவை நம்பி பிழைப்பு நடத்தி வந்த வர்த்தகர்கள் மற்றும் சிறிய அளவில் முதலீடு செய்து வியாபாரம் செய்து வந்த தள்ளுவண்டி, நடைபாதை வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்தனர். பின்னர் கரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மீண்டும் குமரியில் சுற்றுலா மையங்கள் களைகட்டத் தொடங்கியது.
கரோனா பரவல் அதிகரிப்பு
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து குமரி மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. இரு வாரங்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கரோனா வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வெளிமாநிலம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்த பின்னரே குமரி மாவட்டத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 3 நாட்களாக கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் வரத்து குறைந்தது
இதனால் கன்னியாகுமரிக்கு வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரவில்லை. உள்ளூர் பயணிகள் அவ்வப்போது குறைந்த அளவில் வருகின்றனர். குமரியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்குச் செல்லும் முக்கிய சாலையை தவிர 12 இணைச் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்தின்றி கன்னியா குமரி, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை ஆகிய சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணிகள் நடமாட்டம் இல்லாததால் குமரியில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பெயரளவுக்கு படகு சேவை
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரிய அஸ்தமனத்தை காண பயணிகள் வருகை இல்லை. பெயரளவுக்கு விவேகானந்தர் பாறைக்கு மட்டும் படகு சேவை நடைபெறுகிறது. அதுவும் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் குறைந்த பயணிகளுடன் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தினர் படகை இயக்கி வருகின்றனர்.
கன்னியாகுமரி வெறிச்சோடிய தால் அங்கு சுற்றுலாவை நம்பி வருவாய் ஈட்டிய ஆயிரக்கண க்கான வர்த்தகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ் வாதாரம் இழந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதி வரை இந்நிலை தொடருமா? அல்லது கரோனா பரவலுக்கு தீர்வு ஏற்பட்டு சகஜநிலைக்கு கன்னியாகுமரி திரும்புமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா ஆர்வலர்கள், பொது மக்கள் உள்ளனர்.