கரோனா பாதித்த நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை; சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்

கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட பிரகாஷ்.
கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட பிரகாஷ்.
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையினை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சமூக நல பணியாளர்கள் மூலம் சென்னையில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்கள், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க அமைக்கப்பட்டுள்ள கோவிட் - 19 கட்டுப்பாட்டு அறையை ஆணையர் கோ.பிரகாஷ் இன்று (ஏப். 18) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதையடுத்து, பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"இந்த கட்டுப்பாட்டு அறையில் கரோனா வைரஸ் தொற்று குறித்த ஆலோசனைகள் வழங்க 044 - 46122300, 044 - 25384520 என்ற தொலைபேசி எண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணின் மூலம் ஒரே நேரத்தில் 100 அழைப்புகளுக்கு தொடர்புகொண்டு ஆலோசனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் 24 x 7 மணி நேரம் ஆலோசனைகள் வழங்க 6 மருத்துவ அலுவலர்கள் மற்றும் 50 சமூகநல பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியில் உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இந்த தொலைபேசி மனநல ஆலோசனை மையத்தின் வாயிலாக கரோனா தடுப்பூசி, மருத்துவ அவசர உதவி, கரோனா வைரஸ் தொற்று நோய், இதர மருத்துவ நோய்கள், கரோனா தொற்று பரிசோதனை, மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பாதுகாப்பு மையங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் VIDMED காணொலி மருத்துவ சிகிச்சை, கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கான மருந்துகள், தொற்று உள்ள பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், வீடுகளில் தனிமைபடுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல்கள் குறித்தும் மற்றும் மனநல ஆலோசனைகள் இந்த மையத்தின் வாயிலாக வழங்கப்படும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட மாநகராட்சியின் மனநல ஆலோசனை மையத்தின் வாயிலாக சுமார் 4 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஆலோசனைகளை பெற்று பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதித்து தனிமைபடுத்தப்பட்ட பொதுமக்களுக்கு இந்த மனநல ஆலோசனை மையம் பெரிதும் உதவிகரமாக இருந்தது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ மற்றும் இதர மருத்துவ தேவைகளுக்கான ஆலோசனைகளை 044 - 46122300, 044 - 25384520 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக பெற்று பயனடைய வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) (பொ) ஆல்பி ஜான் வர்கீஷ், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in