ஊரடங்கு இருக்காது: ஆனால் இன்னும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்; சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

பிரகாஷ்: கோப்புப்படம்
பிரகாஷ்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது எனவும், ஆனால் பல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஏப். 18) மாநகராட்சி ஆனையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"ஊரடங்கு குறித்து நிறைய வதந்திகள் வருகின்றன. குரூரமான மனப்பான்மை உள்ளவர்களால்தான் இத்தகைய வதந்திகளை பரப்ப முடியும்.

இன்னும் தீவிரமான கட்டுப்பாடுகள் குறித்து இன்று சில அறிவிப்புகள் வரும். ஆனால், அது ஊரடங்கு அல்ல. திருமண நிகழ்வுகள், உணவகங்கள், துக்க நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த இடங்களில் இன்னும் தீவிர கட்டுப்பாடுகள் வரும். இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

மால்கள் உள்ளிட்டவற்றில் முகக்கவசம் அணியாவிட்டால் வாடிக்கையாளர்களை நிச்சயம் அனுமதிக்கக் கூடாது. கூட்டமாக அனுமதித்தால் முதலில் அபராதம் விதிப்போம். அடுத்த தடவை மூடிவிடுவோம். இது சிரமம் ஏற்படுத்துவதற்காக அல்ல, ஒழுக்கத்தைக் கொண்டு வருவதற்காகத்தான்.

இதுதவிர, அன்றாட கரோனா தடுப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும். இவையெல்லாம் செய்தால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்.

மாநகராட்சிக்கு சொந்தமாக 240 விளையாட்டுத் திடல்கள் உள்ளன. அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுவதுமாக அவற்றை மூடவும் முடியாது. மக்கள் கட்டுப்பாடுகளுடன் வெளியில் செல்ல வேண்டும்.

சென்னையில் வீடு, வீடாக பரிசோதிக்க 11 ஆயிரத்து 500 பேர் களத்தில் உள்ளனர். தினமும் அறிகுறி உள்ள 500 பேரை இத்தகைய சர்வே மூலம் கண்டறிகிறோம்.

சென்னையில் கோவிட் கேர் சென்டர்களை பொறுத்தவரையில் 12 ஆயிரத்து 600 படுக்கைகள் உள்ளன. அதில், 1,104 பேர் தான் இப்போதைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுதும் 20 ஆயிரம் பேர் இப்போதைக்கு சிகிச்சையில் உள்ளனர். இதில் 80% பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். மீதம் உள்ளோர் அரசு, தனியார் மருத்துவமனைகள், கேர் சென்டர்களில் உள்ளனர்".

இவ்வாறு பிரகாஷ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in