கரோனா பரவல் தீவிரம்; முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் மாத தொடக்கம் முதல் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப். 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், இறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைப்பு, வார இறுதி நாட்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம், மதக்கூட்டங்கள், திருவிழாக்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தொல்லியல் துறை உத்தரவின்படி முக்கிய சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

எனினும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஏப். 17) நிலவரப்படி, தமிழகத்தில் 9,344 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,884 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 39 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் இன்று (ஏப். 18) ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன் முதல்வர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தின் முடிவில் இது குறித்து முதல்வரின் விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 5-ம் தேதி நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in