

வேளச்சேரி தொகுதியின் 92-வதுவாக்குச்சாவடியில் நேற்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 548 வாக்காளர்களில் 186 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்.6-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை வேளச்சேரி தொகுதி, சீதாராம் நகர் முதல் தெருவில் உள்ள டிஏவி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 92-வது எண் ஆண் வாக்குச்சாவடியில் இருந்து, உரிய பாதுகாப்பின்றி 2 மின்னணுஇயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவிபேட்இயந்திரம் ஆகியவை இருசக்கரவாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.
தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்த நிகழ்வு சர்ச்சையான நிலையில், கொண்டு சென்ற அலுவலர்கள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததால், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 92-வது எண் வாக்குச்சாவடியில் 17-ம்தேதி மறுவாக்குப்பதிவு நடத்த, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, 92-வது எண் வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவை தேர்தல் நடத்தும்அலுவலர் சுப்புலட்சுமி கண்காணித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரியும்சென்னை மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் நேற்று காலை அங்கு வந்து ஆய்வு செய்தார்.
வேளச்சேரி - தாம்பரம் சாலையில் இருந்து வாக்குச்சாவடி வரை 3 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். வாக்குச்சாவடியில் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பில் இருந் தனர்.
வாக்குப்பதிவு மந்தம்
இந்த வாக்குச்சாவடியை பொறுத்தவரை 548 வாக்காளர்களை கொண்டது. இந்த வாக்காளர்கள் அனைவரும், வாக்குச்சாவடி அமைந்துள்ளபள்ளியின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள். காலை 10 மணி வரை 82 வாக்குகள், 12 மணிவரை 138 வாக்குகள் பதிவாகின.அதன்பின் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே நடைபெற்றது.
பிற்பகல் 2 மணிக்கு 157, 4 மணி வரை 170 வாக்குகள் பதிவாகியிருந்தன. இறுதியாக இரவு 7 மணிக்கு 186 வாக்குகள் பதிவாகின. இது ஏப்.6-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்த அன்று பதிவான 220 வாக்குகளை விட குறைவாகும். வாக்குப்பதிவு முடிந்ததும், வேட்பாளர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சீலிடப்பட்டன. பின்னர் மண்டல அலுவலர் கண்காணிப்பில் வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் ஏற்றப்பட்டுஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.