Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

விவேக்கின் திரைத்துறை கடந்த சாதனை

நடிகர் விவேக், திரைப்படங்களில் போக்குவரத்து நெரிசல், கழிவுநீர் தேக்கம், குடிநீர் தட்டுப்பாடு, சாலை பராமரிப்பு, லஞ்சம், ஊழல், மக்கள்தொகை பெருக்கம், மூடநம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு வெளிப்படுத்திய நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் பெரிய அளவில் போய் சேர்ந்தன. சமூகப் பொறுப்போடு கூடிய இவரது நகைச்சுவை உணர்வை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் பாராட்டினர்.

ரஜினி, அஜித், விஜய், விக்ரம்,தனுஷ் என முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் நடித்துள்ள விவேக், ‘நான்தான் பாலா’,‘பாலக்காட்டு மாதவன்’, ‘வெள்ளைப் பூக்கள்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். டெங்கு, கரோனா போன்ற நோய்கள் பரவிய சூழலில் அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் நல்ல நட்போடு இருந்தவர்களில் விவேக்கும் ஒருவர்.

பசுமை கலாம் திட்டம்

சிறந்த நகைச்சுவை கலைஞனாக தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக தன் ஆளுமையை நிலைநிறுத்தியவர் விவேக். ‘நாட்டில் வறட்சி ஏற்பட நாமதான்காரணம். வறட்சியைப் போக்கும்வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ என்று கூறிஅப்துல் கலாம் பெயரில் ‘பசுமைகலாம்’ (கிரீன் கலாம்) திட்டத்தைசெயல்படுத்தி வந்தார். இத்திட்டத்தின் கீழ் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.கல்லூரி மாணவ, மாணவிகள்,இளைஞர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

திரைப்படங்களில் விவேக் பயன்படுத்திய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு’, ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’, ‘கோபால்!!! கோபால்’, ‘எனக்கு எஸ்.பி.யை தெரியும், ஆனா அவருக்கு என்ன தெரியாது’ என்பது போன்ற வசனங்கள் எப்போதும் ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காது.

செய்தியிலும் நகைச்சுவை

தினசரி நாளிதழ்கள் அனைத்தையும் படிக்கும் பழக்கம் கொண்ட விவேக் முக்கிய நிகழ்வுகளை சேகரித்து, தான் நடிக்கும் காட்சிகளில் நகைச்சுவை கலந்து வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவையில் கருத்துகளை வழங்குவதில் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், வாழ்க்கையிலும் ஒருசில சமூகநலக் குறிக்கோள்களை கடைபிடித்து, இறுதிவரை செயல்படுத்தி வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x