Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

அந்தியூர் அருகே வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த இருவர் கைது: கலர் ஜெராக்ஸ் இயந்திரம், நோட்டுகள் பறிமுதல்

அந்தியூர் அருகே கள்ளநோட்டு அச்சடித்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகள் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின்படி அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் பவானி பழனியாண்டவர் கோயில் வீதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. விசாரணையில் அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் என்ற பகுதியில் செல்வம் (54) என்பவரது வீட்டில் கோவிந்தராஜ் கள்ளநோட்டுகள் தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை செல்வம் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்துக் கொண்டிருந்த கோவிந்தராஜ், செல்வம் ஆகிய இருவரையும் பிடித்தனர். மேலும், வீட்டில் இருந்து ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என ரூ.19 ஆயிரத்து 800 கள்ள நோட்டுகள் மற்றும் அச்சடிக்கப்பட்ட நிலையில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 800 கள்ளநோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும், கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் இயந்திரம், கலர் பேப்பர், கத்தி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கோவிந்தராஜ், செல்வம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு கோவிந்தராஜ் கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்ட வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x