Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

சென்னையில் தினசரி கரோனா பரிசோதனையை 25 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் தினசரி செய்யப்படும் கரோனா பரிசோதனையை 25 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

போரூரில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மையத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி போடும் பணி மற்றும் ராமாபுரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, அவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை செய்யும் மையத்தின் நடவடிக்கைகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினமும் சுமார் 2,500 பேருக்கு மேல் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தினமும் இத்தனை நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பினால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். இதனால் வேலைப் பளுவும் அதிகரிக்கும். இதை கருத்தில்கொண்டு மாநகராட்சி சார்பில் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா மாணவர் விடுதி, திருவொற்றியூர், மாதவரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரி, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை, அயனாவரம் அரசுப் பள்ளி, முகப்பேரில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் ராமாபுரம் உள்ளிட்ட 12 இடங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவை எடுக்கப்படும். பின்னர் மருத்துவர் பரிசோதித்து, அவரை வீட்டிலேயே தனிமையில் இருக்க அனுமதிப்பதா, கரோனா சிகிச்சை மையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்வர். தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் இதுபோன்ற முதற்கட்ட பரிசோதனை மையங்களை அதிகரிக்கவும் மாநகராட்சி தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு தொற்று குறைந்ததற்கு, பரிசோதனைகளை அதிகரித்ததும் ஒரு காரணம். அதனால் தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதை 25 ஆயிரமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அதிகாரி எம்.ஜெகதீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x