விவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது புகார்

விவேக் மரணம் குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் மீது புகார்
Updated on
1 min read

விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறை செயலாளர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in