Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

கரோனா 2-வது அலையால் மதுரை அரசு மருத்துவமனையில் ‘ஜீரோ டிலே அட்மிஷன்’ முறை அமல்படுத்தப்படுமா?

கரோனாவின் 2-வது அலையை எதிர் கொள்ள இந்த நோய்க்கு மட்டுமின்றி மற்ற நோய்களுக்கும் அவசர சிகிச்சை அளிக்க ‘ஜீரோ டிலே அட்மிஷன்’ அமல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களி டையே எழுந்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடும் ஒரு நோயாளி அவசர சிகிச்சைக்குச் சென் றால் ஒரு நிமிடத்துக்குள் அவருக்குச் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் தாமதமின்றி சிகிச்சையைத் தொடங்குவதால் ஓரளவு இறப்பு விகிதம் குறைகிறது.

ஆனால், அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் இல்லாததும், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் உடனடியாக சிகிச்சையைத் தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனாலேயே, நோயாளிகள் இறப்பு அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கிறது.

மதுரையில் கடந்த ஆண்டு கரோனா உச்சத்தில் இருந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவில் 3,746 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

அதனால், மதுரை அரசு மருத்துவமனை போன்ற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை துறையைத் தனியாகத் தொடங்கி ‘ஜீரோ டிலே அட்மிஷன்’ வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி மதுரை அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைக்கு துறைத் தலைவரை நியமித்து தனித் துறை அமைத்திருந்தாலும் ‘ஜீரோ டிலே அட்மிஷன்’ முறை பல நேரங்களில் கடைப் பிடிப்பதில்லை எனவும், நோயாளிகளுக்குத் தாமதமாக சிகிச்சை தொடங்குவதால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சுகாதார சமூகச் செயற்பாட்டாளர் வெரோனிகா மேரி கூறியதாவது: கரோனா ஊரடங்கின்போது உயிர் காக்கும் மற்ற நோய்களுக்குச் சிகிச்சை வழங்குவதில் தடை ஏற்பட்டது. ஆனால், கடந்தாண்டு கரோனா ஊரடங்கு இல்லாத மாதங்களான ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் 2,10,612 பேர் உள்நோயாளிகளாக அனு மதிக்கப்பட்டனர். இதில் 1,847 பேர் இறந்துள்ளனர். அதனால், கரோனா ஊர டங்கின்போது மட்டும் உயிரிழப்பு அதி கரிக்கவில்லை.

தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஒப்பீடு செய்யும்போது சென்னை ராஜீவ்காந்தி நினைவு அரசு மருத்துவம னைக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனைக்கும் சரிசமமான அளவில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இந்த இரு அரசு மருத்துவமனைகளும் தமிழகத்தில் மிகவும் முக்கியமானவை. ஆனால், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைநகரில் இருப்பதால் பகல், இரவு என முழு நேரமும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

அங்கு அவசர சிகிச்சைகளை மேற் கொள்வதற்கான வசதிகளும் மேம் படுத்தப்பட்டுள்ளன.

எனவே, சென்னையைப்போல் மிக விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவை கிடைக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் அவசர சிகிச்சைத் துறையை மேலும் மேம்படுத்தி ‘ஜீரோ டிலே அட்மிஷன்’ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

டீன் சங்குமணியிடம் கேட்டபோது, அவசர சிகிச்சைக்குத் தனியாக துறைத் தலைவர் நியமித்து ஜீரோ டிலே அட்மிஷன் நடக்கிறது. தற்போது இறப்புகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x