Last Updated : 18 Apr, 2021 03:18 AM

 

Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

இன்று உலக மரபு சின்னங்கள் தினம்: வரலாற்றை பிரதிபலிக்கும் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை

சிற்பத்தை ஆய்வு செய்யும் உதவிப் பேராசிரியர் போ.கந்தசாமி.

விருதுநகர்

ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ம் நாளை உலக மரபுச் சின்னங்கள் தினமாகக் கொண்டாடும் வேளையில் வரலாற்றைப் பிரதிபலிக்கக் கூடிய சிற்பங்களை நாம் மதித்து பாதுகாக்க முன்வர வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள், பண்டைய காலப் பொருட்கள், சிற்பங்கள் ஆகியவை அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜபாளையம் அருகே தனது உயிரை தானே மாய்த்துக் கொண்டதை விளக்கும் தலைப்பலி கல் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேரா சிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான போ.கந்தசாமி கூறியதாவது:

போரில் மன்னர் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கொற்றவைக்குத் தானமாக தன் தலையை தானே வெட்டிக் கொள்ளும் வீரர்களின் நினைவாக எடுக்கப்படுவது தலைப்பலி கல் என்று அழைக்கப்படுகிறது‌.

ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள முறம்பு அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்த அம்மன் கோயில் வளாகத்தில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தலைப்பலிக் கல் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் வீரன் இரண்டு கால்களையும் நேர் எதிரே மடக்கி வைத்து அமர்ந்த நிலையில் தனது வலது கையில் உள்ள நீண்ட வாள் ஒன்றைக் கொண்டு தன் கழுத்தை வெட்டுவது போன்றும், இடது கையை மேலே உயர்த்தி இருப்பது போன்றும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலை புனரமைக்கும்போது இச்சிற்பம் முக்கியத்துவம் இழந்து மரத்தின் கீழ் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அரசன் போரில் வெற்றி பெற வேண்டியும், உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் அரசன் நலம் பெற வேண்டியும் வீரனால் நவகண்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக ஒரு வீரன் தனது உடலின் ஒன்பது பாகங்களை அறுத்துக் கொடுத்ததால் நவகண்டம் என்று பெயர் அமைந்துள்ளது.

சங்க இலக்கியங்களில் சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, பதிற்றுப்பத்து ஆகிய பாடல்களில் தலைப்பலிக் கல் குறித்த பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. இதில் தலைப்பலி கொடுக்கும்போது வீரர்களுக்கு முரசு கொட்டி வீரக் கூத்தாடி தலைப்பலி கொடுக்கும் நிகழ்வுகள் இடைக்கால மற்றும் பிற்காலங்களில் நவக ண்டம் கொடுக்கும் பழக்கம் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

கோயில்களில் உள்ள பழைய கல் சிற்பங்களை அவற்றின் வரலாற்றுப் பின்னணியை அறிந்து பாதுகாக்க முன்வர வேண்டும். பழைய சிற்பங்களை பாதுகாத்து வரும் கல்லூரி அருங்காட்சியகத்திடம் அல்லது அரசு அருங்காட்சியகத்திடம் சிற் பங்களை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் அப்பகுதி வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x