

கொடைக்கானலில் முக்கிய பிரமுகர்கள் பலர் முகா மிட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும். வார விடுமுறை நாட்களில் சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். கடந்த வாரம் வரை ஓரளவு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற நிலையில், வாரவிடுமுறை நாளான கொடைக்கானலில் நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசனுக்கு கொடைக்கானல் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.
படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இ-பாஸ் முறை, இ-பதிவு முறை ஆகியவற்றின் மூலம் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலாப் பயணிகளை வாழ்வாதாரமாகக் கொண்டு கொடைக்கானல் வர்த்தர்கள், சுற்றுலாத்தலங்களில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு மாதங்களாக வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டுகளைப்போல அல்லாமல் ஓரளவு இருந்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் மீண்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகளின் கொடைக்கானல் வருகை வெகுவாக குறைந்துள்ளது. வார விடுமுறை நாளான நேற்று கொடைக்கானல் சுற்றுலாத்தலங்கள் பெரும்பாலானவை வெறிச்சோடிக் காணப்பட்டன. பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், குணா குகை, மோயர் பாய்ண்ட் ஆகிய பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே காணப்பட்டனர். படகுகள் நிறைந்துகாணப்படும் கொடைக்கானல்ஏரியில் ஒருசில படகுகளிலேயே சுற்றுலாப்பயணிகள் வலம் வந்தனர். பெரும்பாலான படகுகள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்துக் கிடந்தன. சுற்றுலாத்தலங்களில் கடை வைத்துள்ள பலர் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் மதியத்திற்கு பிறகு கடைகளை அடைத்துவிட்டுசென்றனர்.
கரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்திருப்பதாக மாநில அரசு அறிவித்ததும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய ஒரு காரணமாக அமைந்தது. தடுப்பூசி போட்டுக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதும் சுற்றுலாப் பயணிகள் வருகையை குறைத்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் தைரியமாக சுற்றுலாத்தலங்களில் உலா வரலாம் என்ற எண்ணத்தில் பலரும் இந்த வாரம் கொடைக்கானலுக்கு பயணிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த ஆண்டு கோடை விழாவுக்கான முன்னேற்பாடுகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை. இதனால் இந்த ஆண்டு கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே இதுகுறித்து முடிவு செய்யப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய பிரமுகர்கள்
கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். அறைக்கு சென்றது முதல் ஓட்டலை விட்டு இவர் வெளியில் வரவில்லை. நடிகர் விவேக்கின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் நேற்று கொடைக்கானலில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ ஏரிச்சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். இவர் நேற்று மன்னவனூர் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்த்தார். திமுகவை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, பத்திரபதிவுத்துறை செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.