

ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரண்மனையைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட பண்பாடுகள், நினைவுச் சின்னங்கள், வழிபாட்டுத்தலங்கள், இயற்கை அமைப்பு, தொல்லியல் தளங்கள் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிறிய நகரமாக ராமநாதபுரம் மாவட்டம் திகழ்கிறது. ஒவ்வொரு இனத்துக்கும் வளமான பாரம்பரியம், வரலாறு இருக்கும். இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை, அவர்களிடம் உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் குறித்து தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறியதாவது:
இம்மாவட்டத்தில் மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம், பாம்பன் ரயில் பாலம், அழகன்குளம் அகழாய்வு, தேவாரப் பாடல் பெற்ற திருவாடானை, ராமேசுவரம், மாணிக்கவாசகர் பாடல் பெற்ற உத்தரகோசமங்கை ஆகிய சைவத் தலங்கள், திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற திருப்புல்லாணி, அரேபியத் தொடர்பினால் சிறப்பு பெற்று மதநல்லிணக்கம் காத்துவரும் ஏர்வாடி, ஓரியூர் தேவாலயம், மாவட்டம் முழுவதும் பரவலாகக் காணப்படும் மான்கள், நூறாண்டுகள் கடந்தும் வாழும் பெரிய அளவிலான பொந்தன் புளி மரங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், மூலிகைத் தாவரங்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பான்மை மக்கள் தாய்வழிச் சமூகமாக பழங்காலம் முதல் இருந்துவருவதும் சிறப்புக்குறியதாகும்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதி மன்னர்கள் சுமார் 400 ஆண்டுகள் சேதுநாட்டை ஆண்ட சிறப்புக்குரியவர்கள். அவர்களின் பெயர் சொல்லும் வகையில் ராம நாதபுரம் ராமலிங்க விலாசம் அரண் மனையையும், கமுதி கோட்டையையும், தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 9 கி.மீ தொலைவில் உள்ளது திருப்புல்லாணி. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்விய தேசங்களில், 44-வது தலமாகப் போற்றப்படும் ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் கொண்டுள்ள இங்கு, சேதுபதி மன்னர்களின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த ஒரு அரண்மனை உள்ளது.
திருப்புல்லாணியிலிருந்து ரெகு நாதபுரம் செல்லும் சாலையில் தென்னந்தோப்புக்குள் உள்ள இந்த அரண்மனையை, இப்பகுதி மக்கள் 21 மனைவிகளின் அரண்மனை என்றே அழைக்கின்றனர். இங்கு தெற்கு மற்றும் கிழக்கு என இரு வாசல்கள் உள்ளன. கிழக்குப் பகுதியில் உள்ளது இதன் முக்கிய வாசலாக இருந்துள்ளது. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டிடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு அறைகளின் மேல் பகுதியிலும் கோபுரம் போன்ற மேற்கூரை உள்ளது. தாழ்வாரங்களின் மேல் பகுதியில் வளைந்த மேற்கூரை அமைப்பு காணப்படுகிறது.
இதன் உள்ளே மொத்தம் 16 அறைகளும் 16 நீண்ட தாழ்வாரங்களும் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தின் நடுவிலும் படிகள் உள்ள நீச்சல்குளம் வீதம் நான்கு நீச்சல் குளங்கள் காணப்படுகின்றன. இதன் கதவு, ஜன்னல்கள் தேக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதிலிருந்த கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்து விட்டனர். இதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் உடைந்து விழுந்த நிலையில் உள்ளன. கட்டிடங்களில் அரசமரம் உள்ளிட்ட பல மரங்கள் வளர்ந்துள்ளன.
கி.பி.1762 இல் செல்லத்தேவர் என்ற விஜய ரகுநாத சேதுபதி இறந்தபின், அவர் தங்கை மகன் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி இரண்டு வயதில் மன்னரான போது அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார்.
கி.பி.1771 -ல் தஞ்சை மராட்டிய மன்னர் துல்ஜாஜியின் தலைமையிலான படை ராமநாதபுரத்தை முற்றுகையிட்ட போது, அவர் திருப்புல்லாணி அரண்மனையில் தங்கி இருந்து கொண்டு முற்றுகைப் போரை நடத்தி வந்துள்ளார்.
இந்த அரண்மனை கட்டப்பட்டபோது, கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மேலே செல்வதற்குப் படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும் இதை உறுதிப்படுத்துகிறது. பிற்காலத்தில் இதை அரண்மனையாக மாற்றியுள்ளனர்.
சேதுபதி மன்னர்கள் திருப்புல்லாணி மற்றும் ரெகுநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் சிறிய அளவிலான அரண்மனைகளைக் கட்டியுள்ளனர்.. இதில் ரெகுநாதபுரத்தில் இருந்த அரண்மனை முற்றிலும் அழிந்துவிட்டது. இந்நிலையில், ஓரளவு சேதமுற்ற நிலையில் உள்ள திருப்புல்லாணி அரண் மனையை தமிழக அரசு பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.