

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு நடந்தது. கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது:
அதிமுக அரசின் சாதனைகள் மக்களை சென்றடைந்துள்ளது. அதன்மூலம் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதிமுக அரசின் இந்த சாதனைகளுக்கு மக்கள் அளித்த மாபெரும் வெற்றிதான் நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளின் வெற்றி.
தருமபுரியில் அதிமுகவின் தோல்வி நிரந்தரமானது அல்ல. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. ஏனெனில் பா.ம.க. அன்புமணி மீது பதிவாகியுள்ள சிபிஐ வழக்கில் விரைவில் அவருக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்போது நிச்சயம் தருமபுரி இடைத்தேர்தலை சந்திக்கும். அதற்கு அதிமுகவினர் இப்போது இருந்தே தயாராகும் வேலையை கவனியுங்கள். அதிமுகவுக்கு சரிவு ஆரம்பமாகி விட்டது என்று கூறிவரும் பாமக தான் தற்போது காணாமல் போயிருக்கிறது. சாதி, மதத்தை வைத்து யார் அரசியல் செய்தாலும் அவர்கள் நிலைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.