Last Updated : 17 Apr, 2021 08:49 PM

 

Published : 17 Apr 2021 08:49 PM
Last Updated : 17 Apr 2021 08:49 PM

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை தடாகம் சாலையில் உள்ள, வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் இணைந்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் இன்று மனு அளித்தனர்.  படம் : ஜெ.மனோகரன்.

கோவை

கோவை தடாகம் சாலையில் உள்ள, வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆட்சியரிடம் இன்று (17-ம் தேதி) மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த மையத்துக்கு கொண்டு சென்று, பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக், குறிச்சி பிரபாகரன், டி.ஆர். சண்முகசுந்தரம், பையா (எ) கிருஷ்ணன், வ.ம சண்முகசுந்தரம், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மயூரா ஜெயக்குமார், பிரிமியர் செல்வம் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் எஸ்.நாகராஜனை சந்தித்து மனு அளித்தனர்.

அது தொடர்பாக, பின்னர் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”வாக்கு எண்ணிக்கை மையமாக உள்ள, அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி மைய வளாகத்தில், மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இதில், லாலி சாலை சிக்னல் தென்புறம் அருகில் உள்ள நுழைவாயிலிலும், வடபுறத்தில் உள்ள நுழைவாயிலிலும் போதுமான காவலர்கள் கண்காணிப்பு இல்லை.

கல்லூரி வளாகத்தின் முன்புறம், அதாவது மத்தியில் உள்ள நுழைவாயிலில் மட்டும் , உள்ளே வருகின்ற அனைத்து வாகனங்களும் நுழைவாயிலில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு , வாகன எண் பதிவு செய்து கொண்ட பின் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், மீதமுள்ள இரண்டு நுழைவாயில்களிலும் எந்த ஒரு பதிவும் செய்யப்படுவதில்லை. அங்கு கண்காணிப்பும் இல்லை. கண்காணிப்பு இல்லாத, இந்த 2 நுழைவாயில்களில் பாதுகாப்பு பலபடுத்த வேண்டும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் KA 03 NG 3319 மற்றும் TN 38 CB 3333 என்ற பதிவு எண் கொண்ட கார்கள் கல்லூரி வளாகத்தினுள் வந்துள்ளன. ஆனால், இந்த 2 கார்களும் உள்ளே வந்தது தொடர்பாக, எந்த ஒரு நுழைவாயில் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படவில்லை. இது வாக்கு எண்ணிக்கை மையத்தில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகளை உணர்த்துகிறது. கல்லூரி வளாகத்தினுள் பணியாற்றும் அரசு அதிகாரிகள் , சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் டெக்னீசியன்கள் , மின் விளக்குகள் பராமரிக்கும் எலெக்ட்ரிசியன் உள்ளிட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் முறையாக அரசு சார்பில் , மாவட்ட தேர்தல் அலுவலர் கையொப்பமிட்ட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

சிசிடிவி கேமரா பதிவுகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கும் யுபிஎஸ் இணைப்பு வழங்க வேண்டும். எல்லா நுழைவாயில்களுக்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, அதன் பதிவுகளை முகவர்கள் கண்காணிப்பதற்கு ஏதுவாக முகவர்கள் அறையில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யவேண்டும். சிசிடிவி காமிரா வயர் பழுதை சரி செய்ய வேண்டும். கல்லூரி வளாகத்தினுள் நடக்கும் இது போன்ற நிர்வாக குறைபாடுகளை சரிசெய்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறையின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x