Last Updated : 17 Apr, 2021 08:03 PM

 

Published : 17 Apr 2021 08:03 PM
Last Updated : 17 Apr 2021 08:03 PM

கோவையில் வாக்கு எண்ணும் பணியில் 438 ஊழியர்கள்: ஒவ்வொரு சுற்றுக்கும் 14 இயந்திரங்களில் ஓட்டு எண்ணிக்கை

கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 438 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்தது. மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 4,437 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அங்கு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஏற்படுத்தப்பட்டுள்ள காப்பு அறைகளில், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் இன்று கூறியதாவது:

"மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பெரிய தொகுதியாக கவுண்டம்பாளையம் உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக கவுண்டம்பாளையம் தொகுதியை தவிர, மீதமுள்ள சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 9 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படும். கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 20 மேஜைகள் அமைக்கப்படும்.

ஒரு மேஜைக்கு ஒரு நுண்ணோக்கிய மேற்பார்வையாளர் (மைக்ரோ அப்சர்வர்), ஒரு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு வாக்கு எண்ணிக்கை உதவியாளர் பணிபுரிவர். அதன்படி, 10 தொகுதிகளுக்கும் சேர்த்து 438 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவர்.

அதேபோல், ஒரு மேஜைக்கு அரசியல் கட்சிகளின் சார்பில் ஒரு ஏஜென்ட், 6 மேஜைகளுக்கு ஒரு தலைமை ஏஜென்ட் என குறைந்தபட்சம் 170-க்கும் மேற்பட்டோர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருப்பர்.

அதேபோல், சிங்காநல்லூர் தொகுதிக்கு மொத்தம் 32 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்கும். கிணத்துக்கடவு தொகுதிக்கு 35 சுற்றுகள், பொள்ளாச்சி தொகுதிக்கு 23 சுற்றுகள், வால்பாறை தொகுதிக்கு 21 சுற்றுகள், மேட்டுப்பாளையம் தொகுதிக்கு 30 சுற்றுகள், சூலூர் தொகுதிக்கு 33 சுற்றுகள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 34 சுற்றுகள், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு 34 சுற்றுகள், கோவை வடக்குத் தொகுதிக்கு 36 சுற்றுகள், கோவை தெற்கு தொகுதிக்கு 25 சுற்றுகள் என்ற அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

கவுண்டம்பாளையம் தொகுதியை தவிர, மீதமுள்ள தொகுதிகளில், ஒரு மேஜைக்கு 14 இயந்திரங்கள் ஒவ்வொரு சுற்றிலும் எண்ணப்பட உள்ளன. கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் ஒவ்வொரு சுற்றிலும் ஒரு மேஜைக்கு 20 இயந்திரங்கள் மூலம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

கடந்த முறையை விட இந்த முறை வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், முழுமையான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மாலைக்கு பின்னரே தெரியும் வாய்ப்புள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அது தொடர்பான பயிற்சியும் விரைவில் அளிக்கப்பட உள்ளது" இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x