

கோவை மாநகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாநகரில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தினமும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுபவர்களில் 75 சதவீதம் பேர் மாநகராட்சிப் பகுதியைச் சேர்்ந்தவர்கள் ஆவார்.
மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல், தொற்று உறுதி செய்யப்படுபவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தல், தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதியை தனிமைப்படுத்துதல், அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தடுப்புப் பணியை மேற்கொள்தல், கரோனா தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், மாநகராட்சியின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழு அளவுக்கு பலன் கொடுக்கவில்லை. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட, மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் முருகானந்தம், கரோனா பரவலைத் தடுக்க அதிகாரிகள் அடங்கிய கள அளவிலான குழுக்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் வழங்கியுள்ளார்.அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தினர், மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய் தடுப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக மாநகராட்சிப் பகுதியில் கரோனா பரவலைத் தடுக்க மண்டல அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அஸ்தஸ்த்திலான அதிகாரிகளை ‘நோடல்’ அலுவலர்களாக நியமித்து தொற்று பரவல் தடுப்புப் பணியை, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தீவிரப்படுத்தியுள்ளார்
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
"மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, வடக்கு மண்டலத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (கோயில் நிலங்கள் பிரிவு) மேனகா, கிழக்கு மண்டலத்துக்கு மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி, மேற்கு மண்டலத்துக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் சாதனைக்குறள், மத்திய மண்டலத்துக்கு கலால் பிரிவு துணை ஆணையர் கலைவாணி ஆகியோர் ‘நோடல்’ அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள,வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், சளி மாதிரிகளை அதிகளவில் சேகரிக்க வேண்டும்.
அங்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி, நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மண்டல அளவில் பரிசோதனை மையங்களை உருவாக்க வேண்டும். வாரம் முழுவதும், 24 மணி நேரமும் இம்மையங்கள் செயல்பட வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கோ, கரோனா சிகிச்சை மையத்துக்கோ அனுப்ப வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவரை அழைத்துச் செல்ல தேவையான எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கரோனா தொற்று தடுப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகளை கண்டறிய வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும்.
நோடல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள், மாநகரில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.