Last Updated : 17 Apr, 2021 06:32 PM

 

Published : 17 Apr 2021 06:32 PM
Last Updated : 17 Apr 2021 06:32 PM

சபரிமலையைப் போன்று கண்ணகி கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கூடலூர்

கரோனா தொற்று பரவல் காலத்திலும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களை அனுமதிப்பதைப் போல கண்ணகி கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையில் விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குள் கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்து 9கிமீ.தூரத்திலும், கேரளாவில் உள்ள குமுளியில் இருந்து 14கிமீ.தூரத்திலும் அமைந்துள்ளது.

இலக்கியச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கான பாதை கேரளப்பகுதியில் உள்ளது. இதனால் அம்மாநில வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாத பவுர்ணமியில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். கரோனா ஊரடங்கினால் கடந்த ஆண்டும் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி பூஜைக்கு பக்தர்கள் கரோனா விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுகின்றனர்.

அதே போல் கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று ஆன்மிக, வரலாற்று ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து கூடலூரைச் சேர்ந்த பிஎஸ்.நேரு என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கல்குவா ஆஜரானார். வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது, கேரளஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிமன்ற அமர்வு வரும் ஏப்.20 க்குள் (செவ்வாய்கிழமை) முடிவு தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

இதுகுறித்து பி.எஸ். நேரு கூறுகையில், கண்ணகி கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் பக்தர்கள் செல்ல முடிகிறது. கடந்த ஆண்டும் விழா நடக்கவில்லை. எனவே இந்த ஆண்டு சித்திரை முழுநிலவு விழாவில் கரோனா விதிமுறைகளின்படி பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கம்பம் மங்கல தேவி கண்ணகி அறக்கட்டளையினர் இடுக்கி, தேனி மாவட்ட ஆட்சியர்களிடம் நேரடியாக மனு கொடுத்தனர்.

ஆனால் இரண்டு ஆட்சியர்களும் பதில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சித்ரா பௌர்ணமி விழா வரும் ஏப்.27-ம் தேதி வருகிறது. இதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இரண்டு ஆண்டுகளாக கோயிலுக்குள் புதர் மண்டியிருக்கிறது. அதை சரி செய்தால் தான் கோயிலுக்குள்ளேயே போக முடியும், ஆகவே வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x