Published : 17 Apr 2021 04:42 PM
Last Updated : 17 Apr 2021 04:42 PM

திரைத்துறைக்கு வெளியிலும் சமூகப் பொறுப்பு மிக்கவராக திகழ்ந்தவர் நடிகர் விவேக்: ராமதாஸ் இரங்கல்

திரைத்துறைக்கு வெளியிலும் சமூகப் பொறுப்பு மிக்கவராக திகழ்ந்தவர் நடிகர் விவேக் என, பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப். 17) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர். அவரது நகைச்சுவைகள் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கச் செய்ய வைப்பவையாகவும் இருக்கும். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர். அதனால் 'சின்னக் கலைவாணர்' என்று போற்றப்பட்டவர்.

தமது நகைச்சுவைகளின் மூலம் பிறரின் மன இறுக்கங்களைப் போக்கி, நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு வழிகோலிய நடிகர் விவேக், இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகம். அந்த செய்தியை ஏற்க முடியவில்லை.

திரைத்துறைக்கு வெளியிலும் சமூகப் பொறுப்பு மிக்கவராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். மரங்களை நடுவதை தமது சமூகக் கடமையாகக் கொண்டிருந்த அவர், பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தவர். வெளியில் தெரியாமல் பல குழந்தைகளின் கல்விக்கு உதவியவர். மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் உடல் நலம் தேறி விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தை நம்ப முடியவில்லை.

நடிகர் விவேக்-ஐ இழந்து வாடும் அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x