Published : 17 Apr 2021 01:56 PM
Last Updated : 17 Apr 2021 01:56 PM

விவேக் போன்று சுற்றுச்சூழலை காக்க உறுதியேற்போம்: திருமாவளவன் நேரில் அஞ்சலி

நடிகர் விவேக் போன்று சுற்றுச்சூழலை காக்க உறுதியேற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை, சாலிகிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இன்று (ஏப். 17), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நகைச்சுவை தளத்தில் நடிகர் விவேக்கின் பங்களிப்பு மகத்தானது. கோடான கோடி தமிழர்களின் உள்ளங்களில் நிறைந்திருந்தவர். நடிகராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் செயல்பட்டவர். ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டார் என்ற தகவல் பெருமை அளிக்கிறது.

பெயருக்கேற்றாற்போல் விவேகமானவர். அனைவரோடும் நல்லிணக்கமாக பழகக்கூடியவர். சமூக அக்கறை உள்ளவர். அவருடைய இழப்பு திரையுலகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச்சமுகத்துக்கே நேர்ந்திருக்கும் பேரிழப்பாகும். எந்தவகையிலும் அவருடைய இழப்பை நியாயப்படுத்தவோ ஜீரணிக்கவோ இயலாது.

கரோனா தடுப்பூசி குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தியது, எந்தளவுக்கு அவர் சமுகத்தின் மீது அக்கறை கொண்டவர் என்பதை காட்டுகிறது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு பொறுப்புணர்வுடன் அறிவுரை சொன்னவர்.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்பதை மனம் ஏற்கவில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை போன்று மனிதகுலத்தைக் காப்பாற்ற, உயிரினங்களை காப்பாற்ற, சுற்றுச்சூழலை காக்க உறுதியேற்போம். மரங்களை நடுவதற்கு அவருடைய ரசிகர்கள் முன்வர வேண்டும். விசிக சார்பில் அவருக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x