

நடிகர் விவேக் மரணமடைந்ததை தொடர்ந்து கோவில்பட்டியில் அவரது உருவப்படத்திற்கு பசுமை இயக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக ஜொலித்த நடிகர் விவேக் இன்று காலை காலமானார். இதையடுத்து கோவில்பட்டியில் பசுமை இயக்கம் மற்றும் ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை சார்பில் கடலையூர் சாலையில் நடிகர் விவேக் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு இயற்கை வாழ்வியல் மருத்துவர் திருமுருகன், ஜீவ அனுகிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் மெழுகுவர்த்தி ஏற்றி நடிகர் விவேக் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விவேக்கின் தந்தை அங்கையா ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது கடைசி காலத்தில் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் வசித்து வந்தார். இவர்களது குல தெய்வமான அலங்காரி அம்மன், கருப்பசாமி கோயில் கோவில்பட்டி அருகே குருமலையில் உள்ளது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக்கு வருகை தரும்போது நடிகர் விவேக் கண்டிப்பாக குரு மலையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வது வழக்கம். கோயிலுக்கு அவர் ஏராளமான திருப்பணிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.