Published : 17 Apr 2021 10:27 AM
Last Updated : 17 Apr 2021 10:27 AM

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பியவர்: கி.வீரமணி இரங்கல்

விவேக் - கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளை பரப்பியவர் விவேக் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஏப். 17) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"சிறந்த நகைச்சுவை நடிகரும், சீரிய சமூகப் பற்றாளருமான நண்பர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.4.2021) அதிகாலை உயிரிழந்தார் என்று பேரதிர்ச்சியான செய்தி நம்மை பெரும் வருத்தத்துக்கு ஆளாக்குகிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அரசுப் பணியில் இருந்தபடி கலைத் துறையில் நுழைந்து, பின்னர் திரைத்துறையில் பெரு வெற்றி பெற்ற விவேக் சமூக சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்களில் வெளிப்படுத்தி, அதையே தன் அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர்.

குறிப்பாக, 'திருநெல்வேலி' திரைப்படத்தில் தொடங்கி பல படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி, நம்மால் 'பெரியார் விருது' வழங்கிப் பாராட்டப் பெற்றவர்.
திரைத்துறையில் மட்டுமல்லாமல், தன் வாழ்விலும் பொதுப் பணிகளில் ஈடுபட்டு, சமூகச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தவர்.

சுற்றுச்சூழல் காக்க மரக் கன்றுகள் நடுதலை பேரியக்கமாக நடத்தியவர். பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சமூக அக்கறையுடன் உரையாற்றி, இளைஞர்களுக்கு ஊக்கமூட்டியவர்; விழிப்புணர்வூட்டியவர். உலகத் தமிழர்களால் விரும்பப்பட்டவர். 59 ஆண்டுக்குள் அவருடைய மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பாகும்.

அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத் துறையினருக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x