

பகுத்தறிவு சிந்தனைக்கு வெள்ளித்திரையை லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரணக் கலைஞர் விவேக் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப். 17) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
"வெள்ளித் திரையுலகில் 'சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் என்கிற விவேகானந்தன் (59) இன்று 17.04.2021 அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் கே.பாலச்சந்தரால் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அற்புத நகைச்சுவைக் கலைஞர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின்னர் மூட நம்பிக்கை எதிர்ப்புக்கும், அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கு வெள்ளித்திரையை லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரணக் கலைஞர்.
தலைமைச் செயலகப் பணியில் இருந்த காலத்தில் ஓய்வு நேரத்தில் நகைச்சுவை கலையின் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மேடைகளில் நகைச்சுவை கலந்து பரப்புரை செய்யத் தொடங்கிய மேடைக்கலைஞர், திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த விவேக், மத்திய, மாநில அரசுகள், கலை இலக்கிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்.
நாட்டின் மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருதும், சத்தியபாமா பல்கலைக்கழகம் வழங்கிய கவுரவ முனைவர் பட்டமும் குறிப்பிடத்தக்கது.
மேடைக்கலைஞர், நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரக் கலைஞர், சமூக செயல்பாட்டாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட விவேக், காலம் சென்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்துக்களை குழந்தைகளிடம் தொடர்ந்து எடுத்துச் சென்றவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரழிப்பாகும்.
விவேக்கின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் அருள்செல்வி உள்ளிட்ட குடும்பத்தாருக்கும், திரையுலகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.